கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இன்றைய தினம் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இதன் மூலம், அவர் விரைவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் மீண்டும் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட ட்ரம்ப், அமெரிக்க அதிபருக்கான அதிகாரபூர்வ ஹெலிகாப்டரான மெரைன் ஒன்னில் வெள்ளை மாளிகையை சில நிமிடங்களில் சென்றடைந்தார். முன்னதாக, தனது உடல்நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ட்ரம்ப், "நான் உண்மையிலேயே நன்றாக இருக்கிறேன். கொரோனாவுக்கு பயப்படாதீர்கள். அதை உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார் ட்ரம்ப்

மூன்று இரவுகளை மருத்துவமனையில் கழித்த பின்பு வெள்ளை மாளிகை திரும்பிய டொனால்டு ட்ரம்ப், வெள்ளை மாளிகையின் பால்கனியில் நின்று கொண்டு தனது முகக் கவசத்தை கழற்றிவிடு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

ஆனால், ட்ரம்ப் இன்னமும் முழுமையாக கொரோனாவிலிருந்து குணமாகவில்லை என்ற சொல்லப்படுகிறது. அதிபருக்கு சிகிச்சை தொடரும் என்று தெரிவித்துள்ள அவரது மருத்துவர், அவர் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை, அவரிடம் இருந்து பிறருக்கு கொரோனா பரவும் நிலை இன்னும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்த அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில், "இதை (கொரோனா) பார்த்து பயன்படும் பயப்பட வேண்டாம். நீங்கள் இதை வெல்வீர்கள். நாம் முன்னணியில் இன்று இத்துடன் போராட வேண்டும். உங்கள் தலைவனாக நான் அதை செய்ய வேண்டி இருந்தது. அதில் ஆபத்து இருக்கும் என்று எனக்கு தெரியும் இருந்தாலும் நான் அதைச் செய்தேன். நான் முன்னணியில் நின்று போராடினேன். ஒருவேளை நான் இந்த தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறனை பெற்றிருக்கலாம். ஆனால் அது எனக்கு தெரியாது. இப்பொழுது நான் நன்றாக உணர்கிறேன்" என்று தனது காணொளி செய்தியில் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் உடல்நிலை தொடர்பாக கடந்த வாரயிறுதியில் வெளிவந்த முரண்பட்ட அறிக்கைகள் அவரது நோயின் தீவிரத்தன்மை குறித்த கேள்விகளை இன்னமும் எழுப்பி வருகின்றன. மேலும், ட்ரம்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பணிபுரியும் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கும் இதுவரை அதிகாரபூர்வமான பதிலில்லை.

மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, "நான் விரைவில் பிரசாரத்துக்கு திரும்புவேன். போலிச் செய்திகள் தேர்தல் குறித்த போலியான தகவல்களையே அளிக்கின்றன" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்பின் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்த தனிப்பட்ட கேள்விகளை தவிர்த்துவிட்டனர். எனினும், ட்ரம்ப் நலமுடன் உள்ளதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்னர் நான்காவது முறையாக அளிக்கப்படும் ரெம்டிசிவர் மருந்து, மீண்டும் அவர் வீடு திரும்பியதும் ஐந்தாவது முறையாக அளிக்கப்பட்டு அவர் 24 மணிநேரமும் மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி, ட்ரம்புக்கு தொடர்ந்து டெக்ஸாமெத்தசோன் மருந்தும் அளிக்கப்பட்டு வருவதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்

வெள்ளை மாளிகையில் பணியாற்றுபவர்களிடையே கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்ப் மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ட்ரம்புக்கு நெருக்கமான குறைந்தது 12 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள ட்ரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த பலர் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதியன்று வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களாக உள்ளனர். எனவே, இது ஒரு "சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வு" என்று குறிப்பிடப்படுகிறது.