காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தனது கணவர் வேண்டாம் என்று தனியாக வந்து விட்ட நிலையில, “எனது பெற்றோர் மனமுவந்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நான் இப்போது அனாதையாக நிற்பதாகவும்” பேசி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் பெருங்குடியைச் சேர்ந்த 26 வயதான ராஜேஷ் என்ற இளைஞர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த கனிமொழி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் பெற்றோரும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

காதல் திருமணத்திற்குப் பிறகு ராஜேஷ், தனது காதல் மனைவி கனிமொழி உடன், மதுரை விமான நிலையம் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். அத்துடன், ராஜேஷ் மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மனைவி கனிமொழி திருமணம் ஆகி 3 வருடம் ஆகியும் கர்ப்பம் தரிக்காமல் இருந்ததால், அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பரிசோதனை செய்து உள்ளார். அப்போது, கனிமொழிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உள்ளதாகவும், உடற்பயிற்சியின் மூலம் கர்ப்பப்பையில் உள்ள கட்டியைக் கரைக்கலாம் என்றும், மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக வயிற்றில் உள்ள நீர் கட்டியை குறைப்பதற்கு உடற்பயிற்சி கூடத்தைத் தேடிச் சென்று உள்ளனர். அதன்படி, மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்தில் கனிமொழியை சேர்த்து உள்ளார். அங்கு சேர்ந்த கனிமொழி, தொடர்ந்து அந்த கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். 

அந்த நேரத்தில் மிகவும் சோகமாக காணப்பட்ட கனிமொழியிடம், உடற்பயிற்சி நடத்துடன் யோகேஷ் கண்ணா, விசாரித்து உள்ளார்.

அப்போது, “என் கணவன் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை துன்புறுத்தி வருகிறார் என்றும், எனக்கு ராஜேஷ்யிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும்” என்றும் மனைவி கனிமொழி கூறியதாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, உடற்பயிற்சி நடத்துடன் யோகேஷ் கண்ணா, கனிமொழியை மதுரை நரிமேடு பகுதியிலுள்ள பெண்கள் விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார். இதனால், மனைவி கனிமொழியும் கணவரை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்து, வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது, கணவன் ராஜேஸ் தடுத்து உள்ளார். உடனடியாக இது குறித்து உடற்பயிற்சி கூடம் நண்பரிடம் தெரிவித்த கனிமொழி, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து யோகேஷ் கண்ணா தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு ராஜேஸ் வீட்டிற்குச் சென்று கனிமொழியை அழைத்துக்கொண்டு பெண்கள் விடுதியில் தங்க வைத்து உள்ளார். மனைவி வீட்டை விட்டுச் சென்று அடுத்த 3 நாள்களுக்குப் பிறகு யோகேஷ் கண்ணா, கணவர் ராஜேஷிடம் தொடர்பு கொண்டு கனிமொழியின் கல்வி சான்றிதழ்கள், ஜாதகம் உள்ளிட்டவற்றைத் தரும்படி கேட்டு உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த ராஜேஷ், பெருங்குடி காவல் நிலையத்தில் தனது மனைவி, உடற்பயிற்சிக் கூடம் ஆசிரியருடன் நகை, பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாகப் புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து கணவன் ராஜேஷ், மனைவி கனிமொழி, கனிமொழிக்கு உதவி செய்த யோகேஷ் கண்ணன் ஆகியோரை திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “கணவன் ராஜேஷ் உடன் வாழ பிடிக்கவில்லை என்றும், எனக்கு விவாகரத்து பெற்றுத் தரவேண்டும்” என்றும், கனிமொழி உறுதிபட கூறியுள்ளார். இதனையடுத்து, கனிமொழியை போலீசார் அங்குள்ள விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான கனிமொழி, தற்போது வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில், “என் மீது அவதூறாக என் கணவர் புகார் தெரிவித்ததால் நான் மிகுந்த, மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ராஜேஸ் எனது சான்றிதழ்களைத் தர மறுப்பதால் எந்த வித அரசு வேலை உள்ளிட்ட பணிகளுக்கும் விண்ணப்பிக்க என்னால் இயலவில்லை. ஊடகங்களில் செய்தி வெளியானதால் பெற்றோரும் ஆதரவின்றி தற்போது தனித்து விடப்பட்ட நிலையில் நான் இருக்கிறேன். எனது பெற்றோர் மனமுவந்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும், அவர் உருக்கமாகப் பேசி உள்ளார். இதனால், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.