தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் தொடர்ந்துள்ள வழக்கை நிராகரிக்கக் கோரி தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி தொகுதி வாக்காளர் மிலானி தாக்கல் செய்த தேர்தல் வழக்கு மனுவில், தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் குமார்,  வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம், உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.  

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தொகுதி வாக்காளர் என்ற அடிப்படையில் மிலானி என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல. மேலும் தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளை கடைபிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. ரவீந்திரநாத்க்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது. எனவே தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டியிலுள்ள அரசியல் கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 48 லட்சம் ரூபாய் தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. பணத்தைப் பறிமுதல் செய்யச் சென்றபோது கும்பல் ஒன்று அவர்களைத் தாக்கிவிட்டுப் பணத்தை எடுத்துச் செல்ல முற்பட்டதால் வானத்தை நோக்கி ஐந்து ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது என்று தன் மனுவில் சுட்டிக் காட்டிய மிலானி,

“ரவீந்திரநாத் தனது வேட்பு மனுவில் பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து விவரங்களையும், கடன் விவரங்களையும் முழுமையாக பதிவு செய்யாமல் மறைத்திருக்கிறார். இவ்வாறு செய்வது வாக்காளர்களை ஏமாற்றும் செயல் என்று உயர் நீதிமன்றம் தேர்தல் வழக்குகள் தொடர்பான ஆணைகளில் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் சார்ந்த நிறுவனத்தில் பத்து கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதை வேட்பு மனுவில் மறைத்திருக்கிறார்”என்று சொல்லி ரவீந்திரநாத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரினார் மிலானி.

2019 தேர்தல் முடிவுகளுக்குப் பின், தேனியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகேஸ் இளங்கோவன் தன் சார்பில் ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குத் தொடுக்கத் தயாரானார். ஆனால் ஏனோ திடீரென அவர் வழக்குத் தொடராமல் விட்டுவிட்டார். இதையடுத்துதான் தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் இந்த தேர்தல் வழக்கை தொடுத்தார்.

இது ஒருபக்கம் இருக்க அதிமுகவில் இருக்கும் ஒரே எம்பியான ரவீந்திரநாத் மத்திய அமைச்சராக வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தற்போது மத்திய அமைச்சரவையில் சிரோன்மணி அகாலி தள்,லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளின் அமைச்சர்கள் இல்லை. கவுர் ராஜினாமா செய்துவிட்டார். பாஸ்வான் காலமாகிவிட்டார். தற்போது அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரவீந்திரநாத்துக்கு தனி பொறுப்புடன் கூடிய மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமென்று எதிர்பார்த்திருக்கிறார்கள் அவரது தரப்பினர். இந்த நிலையில் ரவீந்திரநாத்தின் வெற்றிக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், மத்திய அமைச்சர் ஆகும் நிலையில் தேவையற்ற அரசியல் சிக்கல்கள் எழும் என கருதினார் ஓ.பன்னீர்செல்வம்

இந்த சூழலில் கடந்த சனிக்கிழமையன்று திருப்பதி சென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இந்த பயணத்தின்போது தனது வெற்றிக்கு எதிராகதொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ரவீந்திரநாத் நடத்தும் சட்டப் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். கடவுளிடம் மட்டுமல்லாமல் திருப்பதியில் தான் சந்தித்த சிலரிடமும் கூட தனது இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார் பன்னீர்செல்வம்.

ஆனால் இன்று நீதிபதி ரமேஷ் அளித்த தீர்ப்பில், ``ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கில் முகாந்திரம் இருப்பதால் அவ்வழக்கை ரத்து செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார். இதனால் தேர்தல் வழக்கு விசாரணை தொடர்வதில் எந்தத் தடையும் இல்லை.

இந்த தீர்ப்பு பற்றி ஓ.பி. ரவீந்திரநாத் தரப்பில், ``இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் எந்த பிரச்சினையும் இல்லை. தேர்தல் வழக்கை எதிர்கொள்ள ரவீந்திரநாத் தயாராகவே இருக்கிறார். இதனால் அவர் மத்திய அமைச்சர் ஆவதில் சட்ட சிக்கல்கள் எதுவும் இருக்காது” என்கிறார்கள்.