“நான் தான் அடுத்த மதுரை ஆதீனம்” என்று, நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் அறைக்குத் தருமபுரம் ஆதீனம் 

முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய மடங்களில் ஒன்றாகப் புகழ் பெற்றுத் திகழ்கிற மதுரை ஆதீனம். 

மதுரை ஆதீனத்தில், 292 வது மடாதிபதியாக இருக்கும் அருணகிரிநாதருக்கு, தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தற்போது சுவாச கோளாறு பிரச்சனை ஏற்பட்டு உள்ளதால், அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சூழலில் தான், “மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டும்” என்று, நித்தியானந்தா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 

மேலும், தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், “நான் தான் மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதி” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

அத்துடன், “மதுரை ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், மதரீதியான சடங்குகள், பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகளையும் நான் தான் பெற்றுள்ளேன்” என்றும், நித்தியானந்தா கூறி உள்ளார். 

இப்படியாக, மதுரை ஆதீனத்திற்கு நித்தியானந்தா உரிமை கோரிய நிலையில், தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் மதுரை ஆதீன அறைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. 

ஆதீனத்தின் அறையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்கள் இருப்பதால் தற்போது சீல் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

முக்கியமாக, “நித்தியானந்தாவை, மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக அறிவித்ததை” மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஏற்கனவே திரும்பப் பெற்றார். அப்போதும், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அருணகிரிநாத சுவாமிகள் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார்.

இதனையடுத்து, மதுரை ஆதீன அறை சீல் வைக்கப்பட்டது குறித்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசன்னிதானம் தற்போது புதிய விளக்கம் அளித்துள்ளார்.

அதன் படி, “மதுரை ஆதீனம் உடல் நலத்துடன் இருந்த போது, மார்கழி மாதம் சந்தித்த போது, ஆதீனத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தனது குரு மூர்த்தம் குறித்தும் தனது விருப்பத்தை அவர் என்னிடம் வெளியிட்டார்” என்றும் குறிப்பிட்டார்.

“நேற்று மதுரையில் அவரை சந்தித்த பொழுது என்னைப் பார்த்து கண்ணீர் விட்ட அவர், எனது கையால் தண்ணீர் அருந்திக்கொண்டார் என்றும், அவர் கூறினார். 

அத்துடன், “ஏற்கனவே கூறிய ஆலோசனையின் படி, தற்போதைய மதுரை ஆதீன இளவரசு மற்றும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆதினத்தின் அறைகளுக்குச் சீல் வைத்ததாகவும், இது அனைத்து ஆதீனங்களின் நடைமுறையில் உள்ள வழக்கம் தான்” என்றும் அவர் கூறினார்.

மேலும், “தற்போதைய மதுரை ஆதீன இளவரசராக இருப்பவர், தருமபுர ஆதீனத்தில் கட்டளை தம்பிரான் ஆக இருந்தவர் தான் என்றும், நாங்கள் மதுரை ஆதீனத்தை எந்தவித நோக்கத்துடனும் பூட்டி சீல் வைக்க வில்லை” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

இதனிடையே, மதுரை ஆதீனத்தின் அறைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.