“ஆண்டு தோறும் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும் என்றும், தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்படும்” என்றும், நிதி அமைச்சர் பழனிவேல்
தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல்
செய்யப்பட்டது. 

அதன் படி, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, அது தொடர்பாக உரையாற்றி வருகிறார்.  

அதில், “உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்றும், தொழில் நுட்ப புத்தகங்கள் தமிழில்
வெளியிடப்படும்” என்றும், அறிவித்தார்.

“உயர்கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொழில்நுட்ப நூல்கள் தமிழில் வெளியிடப்படும் என்றும், அனைத்து தொழில்நுட்ப துறைகளிலும் நடைமுறைகள்
கணினி மயமாக்கப்படும்” என்றும், நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் வாசித்தார்.

குறிப்பாக, “செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி அன்று, 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்” என்றும், 
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தெரிவித்தார்.

மேலும், “சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என்றும், கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்றும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையின் போது கூறினார்.

முக்கியமாக, “தமிழ் வளர்ச்சித் துறைக்கு 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும், தொல்லியல் துறைக்கு 29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்றும், பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

“அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக” அறித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்றும், உறுதிப்படத் தெரிவித்தார்.

அத்துடன், “சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு 4,807 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

அதே போல், “நில நிர்வாக ஆணையர் அவரின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு சிறப்பு சமூகத் தாக்க மதிப்பீடு மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு பிரிவு ஒன்று உருவாக்கப்படும்” என்றும், அவர் பட்ஜெட் உரையில் வாசித்தார்.