“முதலமைச்சர் தலைமையில் 500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் மற்றும் பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை” எடுக்கப்படும் என்று, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ள நிலையி்ல், தமிழக பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள் என்ன? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

“காவல் துறையில் காலியாக இருக்கும் 14,317 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், காவல் துறைக்கு மொத்தம் 8930.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவைத் தவிர தீ அணைப்பு துறைக்கு மட்டும் 405.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது” என்றும், நிதியமைச்சர் அறிவித்தார்.

“ஆசிய மேம்பாட்டு வங்கியின் உதவியுடன் கோசஸ்தலை ஆற்றுப்படுகையில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும், இதற்காக 87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” என்றும், பட்ஜெட் உரையின் போது அவர் பேசினார்.

“மேட்டூர், வைகை, அமராவதி, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க அளவு உயர்த்தப்பட்டு, கல்லணை கால்வாய் புதுப்பித்தல், விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இருந்து 2639.15 கோடி ரூபாய் நிதி உதவி பெறப்பட்டுள்ளது” என்றும், அவர் கூறினார்.

“ காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை உயர்த்த தமிழ்நாடு பசுமை இயக்கம் ஏற்படுத்தப்படும் என்றும், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் ஒன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

அதே போல், “மாநில நிலப்பரப்பில் 33 சதவீதமாக காடு, மரங்களின் அடர்த்தியை உயர்த்த இலக்கு இருப்பதாகவும், ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த முதலமைச்சர் தலைமையில் ஈர நிலங்கள் இயக்கம் புதிதாக உருவாக்கப்படும்” என்றும், நிதியமைச்சர் தெரிவித்தார்.

“உணவு  மானியத்திற்கான ஒதுக்கீடு 8437.57 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், தேவையுள்ள இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு புதிய குழு ஒன்று அமைக்கப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “தமிழக பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக, சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், தமிழக பட்ஜெட்டின் கல்வித்துறை பற்றிய அறிவிப்புகளில் நிதியமைச்சர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

“ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக 409 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் அறிவித்தார்.

“25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதுடன், அண்ணா பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

முக்கியமாக, “ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முன்னுரிமை அளிக்கப்படும்” என்று கூறிய நிதியமைச்சர், “அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக 48.48 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2536.69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்” கூறினார்.

மிக முக்கியமாக, “அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டதாகவும்” அவர் பெருமையோ குறிப்பிட்டார்.

“சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கான நிதி நடப்பு ஆண்டில் இருந்து ஒரு தொகுதிக்கு 3 கோடி ரூபாயாக மீண்டும் அளிக்கப்படும் என்றும், 1200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும், 400 கோடி ரூபாய் செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்” என்றும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

“விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்குகள் நிறுவப்படும் என்றும்,  தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு 187.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு” செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் 5,500 கோடி ரூபாய் சிறப்பு கோவிட் கடன் உட்பட 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உறுதி செய்யப்படும் என்றும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றும், நிதி அமைச்சர் உறுதிப்படத் தெரிவித்தார்.

“போதிய நிதி வசதி இல்லாத 12959 திருக்கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் 130 கோடி ரூபாய் நிலை நிதி ஏற்படுத்தப்பட்டு, திருக்கோவில்களில் நிர்வகிக்க பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றும், அவர் பேசினார்.

“மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் புதுப்பிப்பதற்காக தலா 6 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்தி, அந்த சமூகத்திற்கு சொந்தமான வக்பு சொத்துக்களை அரசு பாதுகாக்க முடியும்” என்றும், அவர் நம்பிக்கை அளித்தார்.

“பழங்குடியினர் துணை திட்டத்திற்கு 1306.02 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டுமொத்த 4142.33 ரூபாயாக உயர்த்தப்படுகிறது” என்றும், அவர் அறிவித்தார்.

“தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைக்க கலைஞர் திட்டமிட்டு, அதற்குரிய நிலமும் கண்டறியப்பட்டது பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்பட வில்லை” என்று, கவலைத் தெரிவித்த நிதியமைச்சர், “தமிழ்நாடு சித்தா பல்கலைக் கழகத்தை இந்த அரசு அமைத்திடும் இதற்கென முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்” என்றும், கூறினார்.

“இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், 25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்” என்றும், தமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்களாக இடம் பெற்றுள்ளன.