திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள்: எப்படிச் சுடுகிறது இரட்டைக் குழல் துப்பாக்கி?

திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள்: எப்படிச் சுடுகிறது இரட்டைக் குழல் துப்பாக்கி? - Daily news

2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிக்கு உந்து சக்தியாக இருந்தது அதன் தேர்தல் அறிக்கை என்பது சமீபகால வரலாறு. அப்போது தேர்தல் அறிக்கையே கதாநாயகன் என்று புகழப்பட்டது. 

‘சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்ற முழக்கம் திமுக தன் தேர்தல் அறிக்கைகளுக்கு தருகிற உத்தரவாதச் சீட்டு. எல்லா கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டாலும், திமுக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவும். தங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிற ஏதோ ஒன்று அதில் இருக்கும் என்ற மக்களின் நம்பிக்கையே இதற்குக் காரணம்.

திமுகவின் தேர்தல் அறிக்கைகளுக்கு தேர்தல்களைப் புரட்டிப் போடும் வல்லமை இருக்கும் என்பதால், எதிரணியும் எப்போதும் அதற்காகக் காத்திருக்கும்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், முதலில் திமுக தனது தேர்தல் அறிக்கையை சீரியசாக எடுத்துக்கொள்ளும் என்பதுதான். தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை குறித்துவைத்துக் கொண்டு, ஒவ்வொறு வாக்குறுதியாக நிறைவேற்றி டிக் அடிக்கும் வழக்கம் திமுக-வுக்கு உண்டு. 

இந்த நடாளுமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல என்பதை தொடக்கம் முதல் திமுக உணர்ந்தே இருக்கிறது. இது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் அல்ல. இரண்டு கருத்தியல்களுக்கு இடையிலான யுத்தம் என்பதை திமுக மீண்டும் மீண்டும் கூறிவருகிறது. 

அதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே திமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியானது. மாநிலங்களின் அதிகாரத்தை செல்லாக்காசாக்கும் வகையில் பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் செயல்படும் நிலையில், ஆளுநர்களின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை திமுக அளித்துள்ளது. தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்தியத் தகுதித் தேர்வான நீட் கட்டாயம் என்ற விதிமுறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் திமுக தேர்தல் அறிக்கை குறிப்பிடுகிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பது மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பதும் இடம் பெற்றிருக்கிறது. 

இதையெல்லாம் இந்திய அளவில் செயல்படும் ஒரு கட்சியால்தான் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டில் இருந்து 21 இடங்களில் போட்டியிடும் ஒரு கட்சியால் எப்படி இத்தகைய வாக்குறுதிகளை செயல்படுத்த முடியும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. 

ஆனால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானபோது, அதில் நீட் தேர்வு தேவையா என்பதை மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம், இந்திய அளவிலான சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும், எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டுக்கு தற்போது இருக்கும் 50 சதவீதம் என்ற உச்ச வரம்பு இந்திய அளவில் அகற்றப்படும் என்ற ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. 

குறிப்பாக இந்த மூன்று கோரிக்கையும் திமுகவும் வலியுறுத்தக்கூடிய கோரிக்கைகள். 

எனவே, திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள விஷயங்களை எப்படி நிறைவேற்றும் என்று கேட்டவர்களுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையே சரியான பதில் என்று ட்வீட் செய்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல, இந்தக் கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி என்பதை இது காட்டுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஒருபுறம் மாநில சுயாட்சி நோக்கில், கொள்கை மாற்றங்களைக் கோருகிற தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டது.

மறுபுறம், அகில இந்தியக் கட்சியான காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இந்தக் கோரிக்கைகளுக்கு அனுசரணையான பார்வை மாற்றம் வெளிப்பட்டிருந்தது. அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரிதும் அங்கீகரித்தார். அவரது பிரசாரக் கூட்டங்களில் எல்லாம் அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அம்சங்களைப் பெரிய அளவில் எடுத்துப் பேசினார். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இன்னொரு அம்சத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டது. பெரிய அளவில் சமூக நலத்திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள், சமூக நீதிக் கோட்பாடு தொடர்பான வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றிருந்தன. 

இந்திய அளவில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரு.1 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், படித்த இளைஞர்களுக்கு அப்ரன்டிஸ்ஷிப் என்பதை உரிமையாக மாற்றும் வகையிலான சட்டம், அப்ரன்டிஸ்ஷிப் செய்யும் காலத்தில் அவர்களுக்கு அரசாங்கமே ரூ.1 லட்சம் மதிப்பூதியம் வழங்குவது போன்ற திட்டங்கள் காங்கிரஸ் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன. 

சமூக மாற்றத்துக்கு, மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முதலீடு செய்யவேண்டும் என்ற திராவிடமாடல் கோட்பாட்டைப் பிரதிபலிக்கும் வாக்குறுதிகளாக இவை பார்க்கப்படுகின்றன. அதனால்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வாக்குறுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து பேசுகிறார். 

தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதற்குக் காரணமானவை இது போன்ற சமூக நலத்திட்டங்களே. இந்த வகையில் தமிழ்நாட்டு பாணியில் இந்திய அளவில் சமூக நீதிக் கோட்பாட்டை செயல்படுத்த காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது என்பதைக் காட்டும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. 

ஒன்றுக்கொன்று கொள்கை அளவிலும் இணக்கம் கொண்ட இரண்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, இணக்கமான தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தேர்தலை எதிர்கொள்கின்றன. முற்போக்கான பார்வை மட்டுமில்லாமல், மக்கள் மனங்களை உடனடியாக கவரும் அம்சங்களும் இந்த தேர்தல் அறிக்கைகளில் இருக்கின்றன. குறிப்பாக, ஏழைப்பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கும் திட்டம், இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு திமுக – காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் இரட்டை ஹீரோக்களைப் போல சேவை செய்யும் என்ற எதிர்பார்ப்பு இதனால் அதிகரித்துள்ளது. 

திமுக- காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரட்டைக் குழல் துப்பாக்கிகளைப் போல இணைந்து நின்று, இலக்கை நோக்கித் துல்லியமாக சுடும் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே களத்தில் தென்படுகின்றன. 

Leave a Comment