ஸ்டாலின் அரசியல்... திமுகவின் தெளிவான கூட்டணி பார்வை

ஸ்டாலின் அரசியல்... திமுகவின் தெளிவான கூட்டணி பார்வை - Daily news

தொடங்கப்பட்ட காலத்திலிருந்து திமுக கருத்தியல் ரீதியாக மத்திய அரசின் அதிகாரத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் கட்சியாகவும், அதிமுக மத்திய அரசின் அதிகாரத்தோடு இணக்கமாக செல்லும் கட்சியாகவுமே அறியப்பட்டு இருக்கிறது. ஆனால் இணக்கமான கட்சியான அதிமுகவை விட ஒன்றிய அரசின் அதிகாரத்தோடு முரண்படும் திமுகவே பாராளுமன்ற அதிகாரத்திலும் மத்திய அரசின் போக்கை தீர்மானிப்பதிலும் பெருமளவு பங்காற்றி இருக்கிறது. ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மாநில சுயாட்சி போன்ற கருத்தியல் ரீதியான அழுத்தங்களை கொடுத்ததில் துவங்கி மத்திய அரசுகளை தீர்மானிப்பதிலும் திமுகவின் பங்கு கணிசமானது. அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கு பிறகு திமுகவின் அதே முக்கியத்துவம் ஸ்டாலின் காலம் வரை தொய்வின்றி தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 

வி பி சிங் ஆட்சி, 1999இல் அமைந்த வாஜ்பாய் ஆட்சி அதன் பிறகு பத்தாண்டு காலம் நீடித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி ஆகியவை உருவாவதில் திமுக மிக முக்கியமான பங்காற்றியது. இதேபோன்ற வாய்ப்புகள் அதிமுகவிற்கு கிடைத்த போதும் அதனை திமுக அளவிற்கு பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு தெரியவில்லை. எம்ஜிஆர் ஜெயலலிதா தொடங்கி இன்றைய எடப்பாடி காலம் வரை அதிமுக மத்திய அரசின் அதிகாரத்தில் பங்கேற்பது குறித்து அல்லது ஒரு கூட்டணியை கட்டமைப்பது குறித்து கவலைப்பட்டதில்லை என்பதே வரலாறு.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்த பிறகு திமுகவின் எதிர்காலம் குறித்த பெரிய அவநம்பிக்கைகள் பரப்பப்பட்டன. கருணாநிதியின் இடத்தை ஸ்டாலினால் நிரப்ப முடியாது என்றும் ஸ்டாலினா அழகிரியா எனும் போட்டி உச்சத்தில் இருக்கிறது என்பதாகவும் தொடர் பரப்புரைகள் ஊடக வெளியில் பரப்பப்பட்டன. அத்தகைய நெருக்கடிகளை தாண்டி தலைவர் ஆன ஸ்டாலின் 2019 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்ட போது மிகத் தெளிவான இலக்கை முன் வைத்திருந்தார். 

பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி தேவை என்பதையும் அந்தக் கூட்டணிக்கான பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என்பதையும் அழுத்தமாக முன்வைத்தவர் ஸ்டாலின் மட்டுமே. அப்போது அந்தக் கூட்டணி அமைப்பதில் முனைப்பு காட்டிய மற்ற மாநில தலைவர்கள் யாரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்த விரும்பவில்லை. மேலும் காங்கிரசில் இருந்த மூத்த தலைவர்கள் பலருக்கு அந்த எண்ணம் இருந்தது போல தெரியவில்லை. இருந்த போதும் ஸ்டாலின் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். 

ஒரு வகையில் இன்றைய இந்தியா கூட்டணிக்கான அடிப்படை அன்றே உருவானது. கடந்த ஐந்தாண்டு காலம் என்பது அந்த முன்னெடுப்பு சரியானதுதான் என மற்ற கட்சிகள் ஒப்புக் கொள்வதற்கு எடுத்துக்கொண்ட அவகாசம் மட்டுமே. ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு இருந்த இந்தப் பார்வையே இன்றைய இந்தியா கூட்டணியின் மைய இழையாக இருக்கிறது. ராகுல் காந்தியை யாரும் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தாத போது அதனை திமுக முழுமனதோடு செய்தது எனும் காரணமே காங்கிரஸ் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் திமுகவுடன் ஒரு உணர்வு பூர்வமான பிணைப்பை உருவாக்கியது என்பதே எதார்த்தம். அதுவே ஸ்டாலின் என் சகோதரர் என ராகுல் காந்தியை சொல்ல வைத்தது. திருமாவளவனும் அதே போன்ற உணர்வுபூர்வமான அன்பை வெளிப்படுத்துவதை நாம் பல முறை பார்த்திருப்போம். 

திமுகவின் இந்த தெளிவான கூட்டணி பார்வையும் தலைமை பதவிக்கு ராகுல் காந்தியை முன்னிறுத்திய பெருந்தன்மையும் திமுகவின் மீதான நம்பகத்தன்மையை கூட்டணி கட்சிகளிடையே பெருமளவு உயர்த்தியது. அதனால் அந்த கட்சிக்கு  தேசிய அரசியலில் ஒரு தவிர்க்க இயலாத இடம் கிடைத்தது. பாஜக பல தருணங்களில் காங்கிரஸ் விட அதிகமாக திமுகவை விமர்சிக்க வேண்டிய சூழல் உருவானது. ஒரு திடீர் வியூக வகுப்பாளர் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் உடைத்து வெளியே கொண்டுவர இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடும் அது நடக்கவில்லை. 

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு திமுக செயல் படுத்திய முக்கியமான திட்டங்கள் அனைத்தும் பெண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. மகளிர் விடியல் பயணம், தோழி விடுதிகள் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் என திமுகவின் முத்திரைத் திட்டங்கள் எல்லாமே பெண்களை இலக்கு வைத்ததாக இருந்தது. இந்த திட்டங்களும் அவை தொடர்ச்சியாக மக்களுக்கு நினைவூட்டப்பட்டதும் பெண்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் எனும் நீண்ட கால நம்பிக்கையை உடைத்தது. 

பிற தலைவர்களுக்கு உரிய மரியாதையை தருவதிலும் பொறுமை மற்றும் விட்டுக் கொடுத்ததிலும் ஸ்டாலின் காட்டிய தனிப்பட்ட ஆளுமை அவரது அகில இந்திய அளவிலான முக்கியத்துவத்தை தக்க வைக்கிறது. ஒருவேளை அவர் தனது தந்தை கருணாநிதியை அப்படியே நகலெடுக்க முயன்று இருந்தால் அது இந்த அளவுக்கு வெற்றிகரமான முயற்சியாக இருந்திருக்காது. தன் பலம் பலவீனம் குறித்த சமரசமற்ற பார்வை மூலமே ஒருவர் தமக்கான தனிப்பட்ட பாதையை தீர்மானிக்க முடியும். அந்த வகையில் கருணாநிதி அளவிற்க்கு அவரால் ராஜதந்திரமாக செயல்பட முடியாது என கணித்த பலருக்கும் ஸ்டாலின் கொடுத்திருக்கும் பதில்தான் ஐந்தாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்த வெற்றிகரமான கூட்டணியும் 3 ஆண்டுகால ஆட்சியும். வரும் தேர்தலில் பாஜக ஆட்சி அமைய விடாமல் தடுக்கப்பட்டால் இந்திய அரசியலின் இன்னும் வலிமையான, தவிர்க்கவியலாத தலைவராக ஸ்டாலின் உருவெடுப்பார். 

Leave a Comment