“அரசியல் எங்களுக்கு தொழில் இல்லை, எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது” என்று, வானதி சீனிவாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்து உள்ளார்.

தமிழக தேர்தல் களம் சூடிப்பிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில் ஸ்டார் வேட்பாளர்கள் எல்லாம் தங்களது தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தங்களை எதிர்த்துப் போட்டியிடும் மற்ற கட்சி வேட்பாளர்களைக் குறி வைத்தும், அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதால், தமிழக தேர்தல் பிரச்சார களம் இன்னும் அதிகமான அளவில் அனல் பறந்துகொண்டு இருக்கிறது.

அதன் படி, கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். 

அதே போல், அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் போட்டியிடுகிறார். இதனால், இந்த தொகுதி இந்த முறை நட்சத்திர தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. அங்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் ஏராளமான சினிமா பிரபலங்கள் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

அத்துடன், சமீபத்தில் புதிதாக பாஜகவில் இணைந்த சினிமா பிரபலங்களும் அந்த தொகுதியில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை ஓசூர் சாலையில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவை நேற்றைய தினம் தாக்கல் செய்தார்.

அதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “இந்த தொகுதியில் அதிமுக முன்னரே வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த முறை நான் இங்கு தோல்வி அடைந்து இருந்தாலும், மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு சேர்த்து இருக்கின்றேன்” என்று, குறிப்பிட்டார்.

மேலும், “கோவை தெற்கு தொகுதியில் நிச்சயமாக 100 சதவீதம் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை என்றும், சினிமா திரைத்துறையில் இருந்து வந்தாலும் மக்கள் பணி செய்தவர்கள் மட்டுமே, அரசியலில் வெற்றி பெற்று இருக்கின்றனர்” என்றும், அவர் கூறினார். 

“தொலைக்காட்சியில் வந்து விட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும், மே 2 ஆம் தேதிக்குப் பிறகு 'பிக்பாஸ்' அல்லது புதிய படத்தில் நடிக்க கமல் போய்விடுவார்” என்றும், அவர் தெரிவித்தார்.

அதே போல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அப்போது, பதில் அளித்து பேசிய கமல்ஹாசன், “டாக்டர் பணி செய்துகொண்டிருந்தவர் 2 ஆம் தேதிக்குப் பிறகு டாக்டர் பணி செய்வார். ஒரு வக்கீல் அதன் பிறகு வக்கீல் பணி செய்வார். அது போலத்தான் நடிக்க செல்வதும்” என்றும் கூறினார். 

குறிப்பாக, “எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது. அரசியல் எங்களுக்குத் தொழில் இல்லை. அரசியல் எங்கள் கடமை. அதையும் செய்வோம். மற்றதையும் செய்வோம்” என்றும், கமல்ஹாசன் ஆவேசமாகப் பேசினார். கமல்ஹாசன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.