திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்புகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளரும் ஆன உதயநிதி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில்  போட்டியிடுகிறார். திமுக வாரிசு அரசியலை முன்னெடுக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்ததால், உதயநிதி 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றவாறெல்லாம் பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில்  சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு , அதுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்..

முதல் முறையாக தேர்தலில் களம் காண இருக்கும் உதயநிதி, தனது 43 வது வயதில் சட்டமன்றத்தேர்தலை சந்திக்கிறார்.சேப்பாக்கத்தை பொருத்தவரை 2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திமுக வெற்றிபெற்றது.இந்தநிலையில் தனக்கு வெற்றி வாய்ப்பு சேப்பாக்கத்தில் இருக்கும் என்பதை நம்பி களம் இறங்கியுள்ளார்.


இந்தநிலையில் வேட்புமனுவில் உதயநிதி கொடுத்துள்ள சொத்துக்கள் விபரம் குறித்த தகவல்கள் வெளியாகின: 

 உதயநிதியின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 28.23 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.22.29 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.6.54 கோடி எனவும் கூறப்படுகிறது.மேலும் உதயநிதி மீது கிட்டதட்ட  சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் அவர் தண்டனை பெற்றது என்பது எதுவும் இல்லை. 

இதில் உதயநிதி சுயமாக வாங்கிய சொத்தின் மதிப்பு ரூ.6.54 கோடி ஆகும். அவர் வைத்திருக்கும் ரேஞ்ச்ரோவர் கார்  ரூ.1.67 கோடி மதிப்பாகும்.அவர் பெயரில் திருவள்ளூரில் வேளாண்மை நிலம் ஒன்று உள்ளது. 

2019 - 20 இல் மட்டும் ரூ.4.89 லட்சம் வருமான வரி செலுத்தியுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அவர் மனைவி பெயரில் ரூ.17.44 லட்சம் செலுத்தியுள்ளதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. கிட்டதட்ட ரூ.1.35 லட்சம் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டிய சொத்து மதிப்பை விட அவரது மகன் உதயநிதியின் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினின்  மொத்த சொத்துக்களின் மதிப்பு கிட்டதட்ட 4 கோடியே 13 லட்சத்து 83 ஆயிரத்து 988 ரூபாயாக இருந்துள்ளது.ஆனால் உதயநிதியின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 28 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது..