அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறி, அவரை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது நிதி முறைகேடு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், தனி நபர் விசாணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. சூரப்பா பதவியில் தொடர கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலினும் கோரிக்கை விடுத்தார். இப்படி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சூரப்பா விஷயத்தில் ஒரே அணியில் நின்றன. 


முன்னதாக  சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட போது கமல் ஹாசன்  கண்டித்து தனது ட்விட்டர் பதிவில், ‘’கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா?  சீண்டுகிறார்கள். என்று நவம்பர் 16 2018 அன்று தெரிவித்திருந்தார்.


இப்போது விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்ட இருக்கும் நிலையில் சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் , ‘’ உள்ளாட்சித்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை என அத்தனைத்துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என சமூக செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே அதை விசாரித்துவிட்டீர்களா?


ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் உன் வாழ்க்கையை அழிப்போம். அவதூறு பரப்பி உன் அடையாளத்தைச் சிதைப்போம் என சூரப்பாவுக்கும் அவர்போல் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை என்று பேசியிருந்தார். 


 இதற்கு பாஜக வின் பி டீம், சங்கி தான் கமல்ஹாசன் என்று அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சூரப்பா விவகாரத்தில் தன்னை சங்கி என விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ' தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? ” என பதிவு செய்து இருக்கிறார்.