நடிகை வனிதா விஜயகுமார் இன்று பாஜகவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

“சந்திரலேகா”, “மாணிக்கம்” உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன் தொடர்ச்சியாக, அவரது குடுபம் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால், அவர் கலைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டு வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிக்பாஸ் 3 வது சீசனில் நடிகை வனிதா கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி, அவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்து போனது.

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து,  விஜய் டிவி யில் வெளியான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா, அதன் மூலமும் பிரபலமானார். அப்போதே, அவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார். அந்த நேரத்தில், வனிதாவுக்கு உதவியாக இருந்த ஏற்கனவே திருமணமான பீட்டர் பால் என்பவருடன் காதல் வயப்பட்டு, அவரை கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி, திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், கணவர் பீட்டர் பால் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாகக் கூறி, சமீபத்தில் பிரிந்தார் என்றும், தகவல்கள் வெளியாகின. 

அத்துடன், “பீட்டர்பால் உடனான பிரிவு மற்றும் சமூக வலைத்தளத்தில் எழும் விமர்சனங்கள் தன்னை பாதிக்கும் என்பதால் சிறிது காலம் கழித்து சோஷியல் மீடியா பக்கம் திரும்புவேன்” என்று கூறியிருந்த வனிதா விஜயகுமார், தற்போது தேசிய கட்சியான பாஜகவில் இணைய இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன் படி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் நடிகை குஷ்பூ, காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், “தான் ஏன் பாஜகவில் இணைந்தேன்?” என்றும் நடிகை குஷ்பூ விளக்கம் அளித்தார். 

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் சமீப காலத்தில் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த நடிகை வனிதா விஜயகுமாரும், தற்போது பாஜகவில் இணைந்து அரசியல் என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கெனவே, வனிதாவின் தந்தை நடிகர் விஜயகுமார், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டிக்கும் நிலையில், தற்போது அவரது மகளும் நடிகையுமான வனிதாவும் பாஜகவில் சேர இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தமிழக பாஜகவில் ஏற்கனவே சினிமா நட்சத்திர பட்டாளமே இருக்கும் நிலையில், தற்போது அந்த பட்டாளத்தில் நடிகை வனிதாவும் புதிதாக இணைய உள்ளது, தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.