கோவையில் “ஆசைக்கு இணங்க மறுத்து, போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொலை செய்தேன்” என்று, கைதான பிரியாணி மாஸ்டர் வாக்கு மூலம் அளித்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோடு பகுதியைச் சேர்ந்த 5 வயதான சங்கீதா என்கிற திருநங்கை, கோவை மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவராக இருந்து வந்தார். இவர் திருநங்கைகளுடன் இணைந்து வட கோவையில் “டிரான்ஸ் கிச்சன்” என்ற பெயரில் பிரியாணி கடை ஒன்றையும் நடத்தி வந்தார். அந்த கடையில், 9 திருநங்கைகள் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சங்கீதாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அந்த வீட்டின் உரிமையாளர் அங்குள்ள சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டுக்குள் சென்று பார்த்து உள்ளனர். அப்போது, அந்த வீட்டில் சங்கீதா கழுத்தறுத்து படு கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலானது அந்த வீட்டில் உள்ள டிரம்மில் அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 3 தனிப்படை போலீசாரும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், சங்கீதாவின் ஓட்டலில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதான ராஜேஷ் என்ற இளைஞர், பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்து இருக்கிறார். அவர், வெளியே எங்கேயும் தங்காமல் சங்கீதாவுடன் தங்கியிருந்து உள்ளார் என்பதும் தெரிய வந்தது.

மேலும், சங்கீதா கொலை செய்யப்பட்ட பிறகு, ரானேஷ் மாயமானதும் போலீசாருக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. இதனால், போலீசார் அவரது 

செல்போனை ஆய்வு செய்த போது, அவர் நாகப்பட்டினத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே அங்கு விரைந்து செனற் போலீசார், ராஜேசை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், “சங்கீதாவை நான் தான் கொலை செய்தேன்” என்பதை ஒப்புக் கொண்டார். 

அதன் பிறகு, அவர் கோவைக்கு அழைத்து வரப்பட்டு ராஜேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் வாக்கு மூலம் அளித்தார். அதன்படி, “கடந்த 23 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து, சங்கீதாவின் ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக பணிக்கு சேர்ந்தேன். என்னை சங்கீதா அவருடைய வீட்டிலேயே தங்க அனுமதித்தார். அவர் திருநங்கை என்பதால், என்னுடன் ஆசைக்கு இணங்குமாறு நான் வற்புறுத்தி வந்தேன். ஆனால், அவர் தொடர்ந்து மறுத்து வந்தார். 

இப்படி, கடந்த 18 ஆம் தேதி அவர் வீட்டில் இருந்த போது, நான் அவருக்கு பாலியல் தொல்லை அளித்தேன். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, “நீ இப்படியெல்லாம் நடந்துகொண்டால் நான் போலீசில் புகார் அளிப்பேன்” என்று மிரட்டினார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சங்கீதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டேன்” என்று, வாக்கு மூலம் அளித்தார்.

இதனையடுத்து, திருநங்கை சங்கீதாவை கொலை செய்த பிரியாணி மாஸ்டர் ராஜேஷை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.