“நடிகர் தனுஷ், சொகுசு காருக்கான நுழைவு வரி பாக்கி 30.30 லட்சம் ரூபாயை அடுத்த 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும்” என்று, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி, நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த மனுவில், “தனது காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து” நடிகர் தனுஷ், மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் தனுஷ் தாக்கல் செய்த இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில், காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து
அலுவலகத்துக்கு அப்போது உத்தரவிட்டது. அதன்படி, அந்த காரை நடிகர் தனுஷ் பதிவு செய்து கொண்டார். அதன் பிறகு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்து இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

இன்று காலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, “பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட, வரி செலுத்தி வருகிறார்கள் என்றும், ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள்” என்று கூறி, நடிகர் தனுஷ்க்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

அத்துடன், “பெட்ரோலில் ஜிஎஸ்டி கட்ட முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? என்றும், பால்காரர் வரி கட்டும் போது நடிகர் வரி கட்டக்கூடாதா?” என்றும், நீதிபதி சரமாறியாக கேள்வி எழுப்பியிருந்தார்.

“மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது, வரியை செலுத்த வேண்டியது தானே?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, “இது தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும், தான் யார்? தான் என்ன தொழில் செய்பவர்? என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும்” என்றும், வலியுறுத்தினார்.

அப்போது, “மீதி வரித்தொகையை செலுத்த தயாராக இருப்பதாக” நடிகர் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, “எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? என்பது குறித்த விவரங்களை வணிக வரித்துறையினர் இன்று மதியம் 2.15 மணிக்குள் தாக்கல் செய்ய” நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் காலையில் உத்தரவு பிறபித்தார். 

அதன் படி, வணிகவரித் துறையினர் சற்று முன்பாக நீதிமன்றத்தில் நடிகர் செலுத்த வேண்டிய வரி விவரங்களை தாக்கல் செய்தனர்.

அப்போது, மீண்டும் 2.15 மணிக்கு மேல் மீண்டும் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் பாக்கி நுழைவு வரியை, அடுத்த 48 மணி நேரத்தில் நடிகர் தனுஷ் செலுத்த வேண்டும்” என்று, அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு, முடித்து வைக்கப்பட்டது.

முன்னதாக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அத்துடன், நடிகர் விஜயக்கு எதிராக மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, தனது கண்டனங்களையும் அந்த நீதிபதி தெரிவித்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியின் இந்த அபராதத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அபராதம் விதித்ததற்கு நீதிமன்றம் இடைக்கால தடையையும் விதித்துள்ளது. இந்த வழக்கு, தற்போது நிலுவையில் உள்ளது.

இதே போல், நடிகர் விஜயை போலவே, நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்த நிலையில், “எஞ்சியுள்ள 30,30,757 ரூபாய் நுழைவு வரியை, அடுத்த 48 மணி நேரத்தில் தனுஷ் செலுத்த வேண்டும்” என்று, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.