“செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கும், தனக்கும் தொடர்பில்லை” என, ஜாமீன் மனுவில் சிவசங்கர் பாபா தெரிவித்துள்ளதாகத் 
தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டதால், சென்னை மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, போலீசார் தன்னை கைது செய்துவிடக் கூடும் என்று, சிவசங்கர் பாபா தலைமறைவானதாகத் தகவல்கள் வெளியானது.

பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை 

டெல்லியில் பதுங்கியிருந்த போது, அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். 

அத்துடன், சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பெண் பக்தர் சுஷ்மிதாவும் அதிரடியாகக் கைது செய்தனர்.
 
அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், அவரது மருமகளும் பாபாவின் பெண் பக்தருமான பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

அப்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உதவியதாகப் புகாருக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களைக் காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

முக்கியமாக, சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில், இது வரை முன்னாள் மாணவிகள் கிட்டதட்ட 18 பேர் தனித்தனியாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு இருக்கும் நிலையில், இது தொடர்பான ஆதாரங்களைத் திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்போது, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்துள்ளார். அந்த ஜாமீன் மனுவில், “செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை” என்று, சிவசங்கர் பாபா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

மிக முக்கியமாக, “ஆன்மிகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்குத் தான் சென்று வந்ததாகவும்” சிவசங்கர் பாபா, அந்த ஜாமீன் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “ஆன்மிக பயணத்திற்காக டெல்லி சென்ற நிலையில் காவல் துறையினர் கைது செய்து உள்ளதாகவும்” சிவசங்கர் பாபா தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 

இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், “போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் கோரிய வழக்கில், சிபிசிஐடி பதிலளிக்க வேண்டும்” என்று, சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.