ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில், ஜெர்மனியை வீழ்த்தி வெண்கல கோப்பை வென்ற வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய ஹாக்கி அணி.

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி அணி திகழ்ந்து வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணியானது, 

சர்வதேச தர நிலையில் 3 வது இடத்தில் உள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது, டோக்கியோ ஒலிம்பிக்கில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஜப்பான் ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தது. 

அதன் படி, நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் போராடி வென்றது. பின்னர் நடைபெற்ற 2 வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட நிலையில், இந்தப் போட்டியில் 1-7 என்ற கோல்கள் கணக்கில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தாலும், ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கணக்கில், மிக எளிதாக வெற்றி பெற்றது.

அதே போல், அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. இதன் மூலமாக இந்திய அணி காலிறுதியில் தடம் பதித்தது.

அத்துடன், லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ஜப்பானை எதிர்த்து விளையாடிய இந்திய அணி, 5-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. 

இதனால், ஏ பிரிவில் 12 புள்ளிகளுடன் இந்திய அணி 2 வது இடத்தை பிடித்தது. இதனையடுத்து, பி பிரிவில் 3 வது இடம் பிடித்த பிரிட்டன் அணியைக் காலிறுதியில் எதிர்கொண்டது. 

மிகவும் விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனையடுத்து, பி பிரிவில் 4 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்து, காலிறுதியில் ஸ்பெயினை தோற்கடித்த பெல்ஜியம் அணியுடன், அரையிறுதியில் எதிர்கொண்டு மோதியது, 

இந்தப் போட்டியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

வெண்கலப்பதத்துக்கான இந்த போட்டியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், ஜெர்மனியை 5-4 கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி வெற்றி பெற்று வெண்கலம் கோப்பையை தட்டிச் சென்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது இந்திய ஹாக்கி அணி.

இதன் மூலமாக, 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று புதிய சாதனையை எழுதியிருக்கிறது இந்திய ஹாக்கி அணி.

மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில், இந்தியா தரப்பில் 17 வது நிமிடத்தில் சிம்ரன் ஜித் சிங், முதல் கோலை அடித்து தூள் கிளப்பினார்.

அதன் பிறகு, ஜெர்மனி 2 கோல்களை அடித்து 3-1 என்று முன்னிலை பெற்றது. இதனையடுத்து, 27 வது நிமிடத்தில் ஹர்திக், 29 வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத், 31 வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் என்று அடுத்தடுத்து கோல்கள் அடிக்க, இந்திய அணியின் அனல் பறந்த ஆட்டம் வெளிப்பட்டது. போட்டியின் 34 வது நிமிடத்தில் மீண்டும் சிம்ரன் ஜித் சிங் 5 வது கோலை அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

குறிப்பாக, இந்த போட்டியில், அற்புதமாக ஆடிய சிம்ரன் ஜீத் சிங், இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

அதன் பிறகு, ஜெர்மனி கடுமையாகப் போராடியது இந்திய தடுப்பாட்டம் அவர்களைச் சமன் செய்ய விடாமல் தடுத்தது, ஆனால் ஆட்டம் முடிய சில விநாடிகளே இருந்த நிலையில், ஜெர்மனிக்கு கிடைத்த ஒரு பெனால்டி கார்னர் ஷாட்டை, இந்திய அணியின் அற்புதன் ஸ்ரீஜேஷ் அருமையாகத் தடுத்து நிறுத்தினார். இதன் மூலாம்,  இந்தியாவின் கனவு, வெற்றி கோப்பையாக மலர்ந்தது. இதன் மூலமாக, ஜெர்மனியை 5-4 என்று கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி அசத்தியது.

இந்திய ஹாக்கி அணியானது 41 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, கடந்த 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் போட்டியில் தற்போது தான், பதக்கம் வென்று வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறது. 

இந்த வெண்கல கோப்பை மூலமாக, ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஆடவர் ஆக்கி அணி தற்போது 12 வது பதக்கத்தைப் பெற்றிருக்கிறது. 

கடைசியாக, இந்திய அணி கடந்த 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தது.

அதே போல், இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் வரலாற்றில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வெற்றி பெற்றுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் பலரும், இந்திய ஹாக்கி அணிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்திய ஹாக்கி அணியானது, தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.