“உன் தங்கச்சியைத்தான் கட்டிக்குவேன்” என்று போதையில் அடம் பிடித்த ரவுடியை, இளம் பெண்ணின் அண்ணன் அம்மிக் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபலமான பெண் தாதா பவுலினா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். பெண் தாதா பவுலினாவின் மகன் 34 வயதான ரவுடி அப்பு என்கிற மணிகண்டன், அந்த பகுதியில் கொலை, அடிதடி என பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ரவுடி அப்பு என்கிற மணிகண்டனுக்கும், இவருடைய மாமன் மகன் எட்வட் என்பவருக்கும் இடையே, தாய் மாமனுக்கு சொந்தமான இடம் தொடர்பான சொத்து தகராறு நிலுவையில் இருந்து வந்துள்ளது. ஆனாலும், அதையும் மீறி, இவர்கள் இருவரும் உறவாடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, எட்வர்ட்டின் தங்கை மீது ரவுடி அப்பு என்கிற மணிகண்டனுக்கு ஒரு கண் இருந்துள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரவுடி அப்பு என்கிற மணிகண்டன் மற்றும் எட்வட் ஆகிய இருவரும் இரவு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். 

இதில், போதையின் உச்சத்திற்கே சென்ற ரவுடி அப்பு என்கிற மணிகண்டன், “உன் தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணிக்கொடு” என்று கேட்டுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த எட்வட், தங்கையைக் கல்யாணம் செய்து வைக்க மறுத்துள்ளார். அதற்கு ரவுடி, “ஏன்” என்று விளக்கம் கேட்க, “உன்னைப் போன்ற ஒரு ரவுடிக்கு என் தங்கையைக் கட்டிக் கொடுத்தால், அவ வாழ்க்கை நாசமாய் போய் விடும்” என்று கூறி எட்வட் மறுத்துள்ளார்.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ரவுடி அப்பு என்கிற மணிகண்டன், “எனக்கு கல்யாணமுனு ஒன்று நடந்தால், அது உன் தங்கச்சியோடு தான். கட்டுனா உன் தங்கையைத்தான் கட்டுவேன்” என்று கூறிக்கொண்டே போதையில், அங்கேயே சரிந்துள்ளார்.

மேலும், கீழே சரிந்தாலும், “உன் தங்கச்சி எனக்குத் தான்” என்று அவன் புலம்பிக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன மாமன் மகன் எட்வட், “ஒரு வேளை நிஜமாகவே நம் தங்கச்சியைக் கல்யாணம் செய்து கொண்டு விடுவானோ? அதற்கு நாம் சம்மதிக்கவில்லை என்றால், நம்மை அவன் கொலை செய்து விடுவானோ” என்று பல்வேறு காணங்களில் யோசித்துள்ளார்.

இதனால், என்ன செய்வது என்று அதிகாலை வரை தூக்கம் இன்றி தவித்து வந்ததோடு யோசித்த வந்த எட்வட், அதிகாலை நேரத்தில் ரவுடி வீட்டிற்கு வந்து, அங்குள்ள அம்மிக் கல்லை எடுத்து, தூங்கிக் கொண்டு இருந்த மணிகண்டன் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

இதில், ரவுடி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, எட்வட் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார்.

இது குறித்து விரைந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார், மணிகண்டன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த எட்வட்டை தேடி வந்த நிலையில், தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். எட்வர்ட்டிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவ்வளவு உண்மைகளும் தெரிய வந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.