தருமபுரி அருகே பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரின் கந்துவட்டி கொடுமையால் தந்தை - மகன் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் தேவரசம் பட்டியை சேர்ந்த திருவேங்கட மூர்த்தி என்ற இளைஞர், அந்த பகுதியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். திருவேங்கட மூர்த்தி வெளியூர் செல்லும்போது, அவரது தந்தை அந்த பியூட்டி பார்லரை கவனித்துக்கொண்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், பியூட்டி பார்லரை மேலும் விரிக்காக்கம் செய்ய நினைத்த திருவேங்கட மூர்த்தி, தருமபுரி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள தனியார் பைனான்ஸ் தொழில் நடத்தும் நாசர் என்பவரிடம் 40 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருக்கின்றனர்.

வாங்கிய அந்த 40 லட்சம் ரூபாய் கடனுக்கு இது வரை 3 கோடியே 90 லட்ச ரூபாய் வட்டியும் முதலுமாகத் திருப்பி செலுத்தி உள்ளனர். ஆனாலும், திருவேங்கட மூர்த்தி வாங்கிய கடனுக்கு மேலும் ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்று நாசர் மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. மேலும், இது தொடர்பாக நாசர் அவருக்கு கடும் நெருக்கடிகளைத் தந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, “ஒரு கோடி ரூபாய் பணம் இல்லை என்றால், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை விற்றாவது பணம் தர வேண்டும் என நாசர்  தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்துள்ளார்” என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான திருவேங்கட மூர்த்தி, கந்துவட்டிக்காரர் நாசர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். ஆனால், இது வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இன்னும் மன விரக்தியடைந்த திருவேங்கட மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள வளாகத்தின் முன்னால் தனது தந்தையுடன் மண்ணெண்ணெய்யை தன் உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயன்றுள்ளார்.

இதனைக் கண்ட, அங்கிருந்த போலீசார், ஓடிவந்து இருவரையும் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர். இதனையடுத்து, அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட திருவேங்கட மூர்த்தி, “நான் வாங்கிய 40 லட்சம் ரூபாய் கடனுக்கு, இதுவரை 3 கோடியே 90 லட்ச ரூபாய் பணம் கொடுத்தும், தொடர்ந்து வட்டியை உயர்த்தி காட்டி மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டுகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “எங்கள் வீட்டையும் அபகரித்துக்கொண்ட அவர், இன்னம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தொல்லை தருகிறார் என்றும், பணம் இல்லை என்றால், என் சிறுநீரகத்தைக் கேட்கிறார்” என்றும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

மேலும், “என் தந்தை மற்றும் என் மனைவி இருவருடையை வங்கி காசோலைகளையும் வாங்கி வைத்துக்கொண்டு, அவர் எங்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும்” கண்ணீருடன் புகார் அளித்தார். 

அத்துடன், “நான் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறி என்னையும், எனது குடும்பத்தாரையும் மிரட்டும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நாசரிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்” என்றும்,  திருவேங்கட மூர்த்தி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து,  திருவேங்கட மூர்த்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தற்போது தமிழக அரசு தடை விதித்திருந்தாலும், மக்களை பாதுகாக்கும் பணியில் இருப்பவர்கள், இது போன்று சொந்த வாழ்க்கையில் நரி குணத்துடன் இருப்பது என்பது, இந்த சமூகத்தை அழிவுக்கு பாதைக்கே அழைத்துச் செல்லும் என்பது மட்டும் நிதர்சனம். அதிகாரிகள் தான், இதுபோன்ற பிரச்சனைகளை களை எடுத்து, பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும் என்பதே, பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.