இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்களும்கூட இந்தத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதைக் காணமுடிகிறது. சாமானிய மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், காவலர்கள் என யாரும் கொரோனாவுக்கு தப்பவில்லை. உயிரிழப்போ, சாதாரண தொற்றோ... கொரோனா யாரையுமே விட்டதாகத் தெரியவில்லை. 

பிரபலங்களுக்கான கொரோனா விஷயத்தில், தமிழகத்தில் தி.மு.க.வின் கட்சி உறுப்பினர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 4 தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் பாதிக்கப்பட்டிருந்த சம்பவங்களும்கூட நடந்திருக்கின்றன. பாலிவுட்டில், திரைப்பிரபலங்கள் நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படியான ஒன்றாக, பாலிவுட்டின் பச்சன் குடும்பம் முழுவதுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது சமீபத்தில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. முதலில் நடிகர் அமிதாப்பச்சனுக்கு உறுதிசெய்யப்பட்டிருந்த தொற்று, அடுத்தடுத்த நாள்களில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுதியானது. அவரின் 8 வயது பேத்தியையும், கொரோனா விடவில்லை.

அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா என பச்சன் குடும்பத்தில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவருமே மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர்.

அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மத்தியில் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பயத்தை தொடர்ந்து, பிரபல நடிகர்கள் பலரும் கூடுதல் கவனத்தோடு செயல்பட தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் அச்சமடைந்த நடிகர் ஷாருக்கான் தனது வீடு முழுவதையும் பிளாஸ்டிக் கவரால் மூடியுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கான் குடும்பத்தினருடன் வசிக்கும் அந்த சொகுசு பங்களா மேலிருந்து கீழாக முழுவதுமாக, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இருப்பதால் இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது. நடிகர் ஷாருக் கான் ஏற்கனவே தனது 5 அடுக்கு மாடி அலுவலகத்தை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கொரோனா பற்றி ஷாருக்கான முந்தைய மாதங்களில் பேசியிருந்தார். தனது முந்தைய ட்விட்டர் பதிவொன்றில், ``நாம் அனைவரும் கண்ணால் பார்க்க முடியாத கொரோனா வைரசால் நெருக்கடியை அனுபவித்து வருகிறோம். இந்த வைரசை எதிர்த்துப் போராடும் நம் நாட்டின் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவத் துறை வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் அனைவரும் ராணுவ வீரர்களுக்கு நிகரானவர்கள். இத்தகைய பணியை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கையுறைகள், முக கவசங்கள், பாதுகாப்பு உடை போன்ற உபகரணங்கள் தேவைப்படும்.

எனவே நமது சுகாதார வீரர்களைப் பாதுகாக்க உதவும் வகையில் எனது மீர் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கலாம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தும் துணிச்சலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுக்களை ஆதரிப்போம்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஒரு சிறிய உதவி நீண்ட தூரம் பயணிக்க நமக்குத் தேவையானதாக இருக்கும்" என்று கூறியிருந்தார். 

அதேபோல, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக பல்வேறு உதவிகளைச் செய்திருந்தார் ஷாருக். இதுகுறித்து அவர் அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். அதில்,

``கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். நானும், என் மனைவியான கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும். 

மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு 50 ஆயிரம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் (பி.பி.இ. கிட்ஸ்) வழங்கப்படும். மும்பையில் உள்ள 5 ஆயிரத்து 500 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். 2 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வீட்டு வேலை செய்பவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படும். மேலும் மும்பையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருந்தது.

இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு, பொறுப்புணர்வோடு இருந்த ஷாருக்கான், இப்போது தன்னுடைய வீட்டை பிளாஸ்டிக் கவரால் மூடியிருப்பது, மற்றுமொரு முன்னெச்சரிக்கை விஷயமாகவே பார்க்கப்படுகிறது

 

- பெ.மதலை ஆரோன்.