கொரோனா தொற்றால் சென்னையில் இன்று 26 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி, அடிக்கல் நாட்டினார். இதனால், கள்ளக்குறிச்சி சிறுவாங்கூர் கிராமத்தில் ரூ.381.76 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ளது.

அதேபோல், மறைந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உருவப் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று திறந்து வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணொலி மூலம் படத்தைத் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து, காணொலி காட்சி மூலம், பேசிய மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகனின் உருக்கத்தோடு பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாட்டை பொருத்த வரை, கொரோனா வைரஸ் சென்னையில் மையம் கொண்டு, தன் வீரியத்தை நாளுக்கு நாள் அதி தீவிரமாகக் காட்டி வருகிறது. இதனால், சென்னையில் தற்போது கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது, சென்னை மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அதன்படி, இன்று ஒரே நாளில் சென்னையில் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர், இன்று சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், இன்று அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியானார்கள்.

அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உட்பட இன்று ஒரே நாளில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,022 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன், அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா இல்லை என்றும், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. 

அதேபோல், சென்னையில் அதிக அளவாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,586 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் 2,431 பேர் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
மேலும், மதுரையில் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு சிகிச்சை பெற்று வந்த 4 பேர், இன்று அடுத்தடுத்து  உயிரிழந்துள்ளனர். மதுரையில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3473 ஆக உயர்ந்திருந்தது. அத்துடன், மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக இருந்தது. இந்நிலையில், அங்குள்ள கொரோனா  சிறப்பு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு சிகிச்சை பெற்று வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவரும், செல்லூர் பக்கதியை 57 வயது பெண் ஒருவரும், அதே பக்கதியைச் சேர்ந்த 39 வயது ஆண் ஒருவரும், காரியாபட்டியைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர் என இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால். மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது. 

அத்துடன், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு இன்று மேலும் 78 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,217 ஆக அதிகரித்துள்ளது. அந்த மாவட்டத்தில் 106 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், 3,113 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அத்துடன், முதியவரின் உடல் நலம் குறித்து அறியாமலேயே தனிமைப்படுத்தியதாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட முதியவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லையெனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,842 ஆக அதிகரித்துள்ளது. இது வரை அந்த மாவட்டத்தில் 19 பேர் பலியாகி உள்ள நிலையில், 509 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.