அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன? தற்போதைய கள நிலவரம் என்ன என்பதனை தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் களம் தற்போது விருவிருப்பு அடைந்துள்ளது. தமிழகத்தின் பிராத கட்சிகள் எல்லாம் தங்களது தேர்தல் பரப்புரைகளைத் தொடங்கி விறுவிறுப்பாக கள பணி ஆற்றிக்கொண்டு இருக்கின்றன. அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஒரு பக்கம் ஈடுபட்டு இருந்தாலும், மற்றொரு பக்கம் அதிமுக - திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடானது விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

அதன் படி, அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இவற்றுடன், வரும் 6 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்து உள்ளது.

இந்த தொகுதி உடன்படிக்கையில் பாஜக சார்பில் சி.டி.ரவி, எல்.முருகன் கையெழுத்திட்டனர். அதிமுக சார்பில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். தொகுதி 
உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

அதே போல், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு ஏற்கனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், பாமக போட்டியிட விரும்பும்  23 தொகுதிகள் என்னென்ன என்பது பற்றி இரு தரப்பிலான பேச்சு வார்த்தையானது, சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது, பாமக தரப்பில் பாமக போட்டியிட விரும்பும்  23 தொகுதிகள் பற்றிய விபரங்களை அதிமுக வசம் அளித்தனர்.

இந்த பேச்சு வார்த்தையில், பாமக தரப்பில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ஏகே.மூர்த்தி, பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக வெற்றி பெறும் தொகுதிகளை பாமக கேட்பதால், தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நிலவுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 

அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளை புதிய நீதிக் கட்சி கேட்டுள்ளது. அத்துடன், “இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடவும் கட்சி முடிவு செய்துள்ளதாக” புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்து உள்ளார்.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

அதாவது, “அதிமுகவுடன் தமாகா தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை தொடங்கிய போது, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை தமாகா, அதிமுகவிடம் கொடுத்திருக்கிறது. ஆனால், இதனை ஏற்க அதிமுக மறுத்துள்ளது. இதனால், 7 தொகுதியாவது ஒதுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பில் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக கூறிவருவதாகவும், குறிப்பாக வால்பாறை, பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அதிமுக தெரிவித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளன. 

இது தொடர்பாக பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “அதிமுக உடனான தொகுதி உடன்பாடு விரைவில் வெளியாகும்” என்று, கூறியுள்ளார். 

மேலும், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி ஆகியவைகளின் நிர்வாகிகளும் நேற்றைய தினம் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். 

முக்கியமாக, “25 தொகுதிகளாவது ஒதுக்கினால் தான் கையெழுத்துப் போடுவோம்” என்று, தேமுதிக திட்ட வட்டமாகக் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்ட மன்ற தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், தாங்கள் கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்து என்று தேமுதிக, உறுதிப்படக் கூறியுள்ளது. 

இது தொடர்பாக தேமுதிக துணைச் செயலாளர் பார்த்த சாரதி கூறுகையில், “முதலில் அதிமுகவிடம் 41 தொகுதிகள் கேட்டோம். தற்போது 25 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “நாங்கள் எதிர் பார்க்கும் தொகுதிகளை அதிமுக ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும், நாங்கள் மாநிலங்களவை எம்.பி சீட் கேட்டுள்ளோம் என்றும், அதற்கு அதிமுகவும் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது” என்றும், அவர் கூறினார். 

இதனால், “ 25 தொகுதிகளாவது அவர்கள் எங்களுக்குத் தர வேண்டும் என்று, அதிமுகவிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்றும், தேமுதிக கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என்றும், அதிமுகவை தவிர வேறு யாருடனும் தேமுதிக தற்போது வரை பேச்சு 

வார்த்தை நடைபெறவில்லை என்றும், அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும் என்று, நாங்கள் நம்புகிறோம்” என்றும், அவர் கூறினார். 

இதனால், அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கிடு இன்னும் முழுமையாக முடியாமல் இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் சூழலில், அதிமுகவில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியானது 
குறிப்பிடத்தக்கது.