நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகர் விஜய் ரசிகர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி போர்க்கொடி தூக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடக்கம் முதலே நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அது போலவே, நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவரையும் சீமான் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தான், “நடிகர்கள் ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல, இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணமே வராது” என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் மிகவும் ஆவேசமாகப் பேட்டி அளித்திருந்தார்.

அத்துடன், “ரஜினியும் - கமலும், எம்.ஜி.ஆர் யை தூக்கிப் பிடித்துப் பேசுவதால், அந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்குத் தான் போய்ச் சேரும்” என்றும், சீமான் விமர்சனம் செய்திருந்தார்.

முக்கியமாக, “முல்லை பெரியாறு அணையைத் தாரை வார்த்தது எம்.ஜி.ஆர் தான் என்றும், பிரபாகரன் மீது பற்று கொண்டதால் 100 சதவீதம் எம்.ஜி.ஆரை நாங்கள் மதிக்கிறோம்” என்று குறிப்பிட்ட சீமான், “ஆனால் எம்.ஜி.ஆர் அப்படி என்ன நல்லாட்சி தந்தார்?” என்றும், சீமான் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார். இது, தமிழக முழுவதும் பெரும் வைரலானது. இதனால், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

அத்துடன், நடிகர்கள் ரஜினி, கமல் ரசிகர்களும் கடும் கோபம் அடைந்த நிலையில், உச்சக்கட்ட கோபம் அடைந்த நடிகர் விஜய் ரசிகர்கள், சீமானுக்கு எதிராகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி தங்களை எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்

குறிப்பாக, மதுரை மற்றும் தேனியில் சீமானை வண்மையாகக் கண்டிக்கிறோம் என விஜய் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். 

சீமானின் இந்த பேச்சக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தேனி மாவட்ட இளைஞர் அணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தேனி என்.ஆர்.டி. நகர் பகுதியில் சீமானை கண்டித்துக் கண்டன போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.  

அதில் “அரசியலின் நடிகன் சீமானே எங்கள் தளபதி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” உள்ளிட்ட பல வாசகங்கள் அதில் இடம் பெற்று உள்ளன. மற்றொரு போஸ்டரில், “அரசியல் நடிகன் சீமான்” என்றும், “சீமானுக்கு தளபதியை பற்றி பேச தகுதி இல்லை” என்றும், “சீமான் மன்னிப்பு கேட்டாக வேண்டும்” என்றும், விஜய் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். 

மேலும், சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிரான #ஹேஷ்டேக் ஒன்றை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள். தேவையில்லாமல் நடிகர் விஜய் பற்றி பேசியதால் கொந்தளித்துப் போன விஜய் ரசிகர்கள், சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்தும் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 

அதே போல், 'எம்.ஜி.ஆர். குறித்து சீமான் பேசியதற்குப் பதில் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், “'எம்.ஜி.ஆர் மீது புழுதி வாரித் தூற்ற நினைத்தால், அது அவருக்கே ஆபத்தாகத் தான் முடியும். எம்.ஜி.ஆரின் புகழை யாராலும் அழிக்க முடியாது” என்றும், தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, “விஜய்யை பாராட்டி அரசியலுக்கு வர வேண்டும் என கூறியவர் சீமான்” என்று, கவிஞர் சினேகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.