வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி, குடிபோதையில் தனது மகளிடம் தந்தை ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், கடும் அதிர்ச்சியடைந்த மகள், அம்மிக்கல்லை போட்டு தந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள நெடுங்காம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான முருகன், தெருக்கூத்து நாடக கலைஞராக இருந்து வந்தார். 

முருகனுக்கு 32 வயதான மனைவி மஞ்சு உள்ளார். இந்த தம்பதிக்கு, 2 மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகளான 19 வயது ஷர்மிளா, பள்ளி படிப்பை முடித்துவிட்டு, கல்லூரி படிப்பிற்காகக் காத்திருந்து உள்ளார். 

இப்படியான சூழலில், தந்தை முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து உள்ளது. குடிக்கு அடிமையான முருகன் எப்போதும், மது போதையிலேயே வீட்டிற்கு வருவதைப் பழக்கமா கொண்டிருந்தார்.

இந்த சூழலில் தான், முருகனின் மனைவி மஞ்சு மற்றும் அவரது 2 வது மகள் ஆகிய இருவரும், வேலை விசயமாகத் திருவண்ணாமலைக்கு சென்று உள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் மூத்த மகளான 19 வயது ஷர்மிளா மட்டும் தனியாக இருந்து உள்ளார்.

அப்போது, மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்த முருகன், தனது மகளைப் பார்த்துச் சபலப்பட்டு உள்ளார். இதனால், வீட்டில் தனியாக இருந்த தனது மூத்த மகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த 19 வயதான மகள் ஷர்மிளா, தந்தையைத் தடுத்து, திட்டி உள்ளார். ஆனால், அவர் விடப்பிடியாக மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழித் தெரியாமல், அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தந்தை முருகன் கழுத்தில் பலமாகத் தாக்கி உள்ளார். 

இதில், தாக்குதலுக்கு ஆளான முருகன், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இது தொடர்பாக அக்கம் பக்தக்தினர் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார், உயிரிழந்த முருகனின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், உயிரிழந்த முருகனின் மனைவி மஞ்சு மற்றும் தந்தையைக் கொன்ற மகள் ஷர்மிளா ஆகியோரை கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.