கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி, "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்" என்றார்.


அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பொறுத்தவரை, பல அடிப்படையான சட்ட ரீதியான கேள்விகளும் அரசியல்சாஸன அடிப்படையிலான கேள்விகளும் இன்னும் பதிலளிக்கப்படாமலே உள்ளன.


அடுத்த ஐந்து ஆறு  மாத காலத்துக்கு கூட , வங்கி மற்றும் ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசை தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. ஓராண்டு காலத்துக்கு ஏடிஎம்-களில் குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே பணம் எடுக்க முடிந்ததால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். 


பணமதிப்பிழப்பு நடவடிக்கையையால் கள்ள நோட்டுகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது. கள்ள நோட்டுக்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் சுமார் 400 கோடி ரூபாய் அளவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலுள்ள மொத்த பணத்தோடு ஒப்பிடுகையில் இதன் சதவிகிதம் மிகவும் குறைவே. எனவே இந்த நடவடிக்கையால் கள்ள நோட்டுகளை ஒழிப்பதென்பது தேவையில்லாத ஒன்றெனக் கருதப்பட்டது.


2000 ரூபாய் நோட்டுகள் வந்தபிறகு கள்ள நோட்டுப் புழக்கமும், கருப்புப் பணமும் இன்னும் அதிகரித்துவிட்டதாகப் புகார்கள் எழுந்த சில தினங்களில் பல கோடி மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாகக் கைப்பற்றியது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. அதன்பின் சிலமாதங்களிலேயே 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்ததோடு, அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது என செய்தி வெளியிடப்பட்டது.  


தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் இனி ஏடிஎம் இயந்திரங்களில் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க ரிசர்வ் வங்கி முடிவுசெய்திருப்பதாகவும், இதனால் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளதாகவும் வங்கிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல தான் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.


இதன் காரணமாக பெரும்பாலான ஏடிஎம்களில் இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா , சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி போன்ற பல்வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் 2000 நோட்டுகளின் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.இது படிப்படியாக அனைத்து வங்கிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும். 
பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட நன்மை என்று பார்த்தால், வங்கிக்கணக்குகள் புதிதாக நிறைய ஏற்படுத்தப்பட்டன, வங்கிவழி பணப்பரிமாற்றமும், ஆன்லைன் பணப்பரிமாற்றமும் ஓரளவு அதிகரித்தது. வருமான வரித்தாக்கல் அதிகரித்தது. அதன்காரணமாக வருமான வரி வசூலும் அதிகரித்தது. 


கறுப்புப்பணத்தை ஒழிப்பது உள்ளிட்ட சில நோக்கங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறானதல்ல. ஆனால், அதைச் செயல்படுத்திய விதம்தான் பேரழிவில் முடிந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்தித்தது குறிப்பிடத்தக்கது.