தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், பார்வையாளர்களிடையே தனது அடையாளத்தைப் பதித்தார் நடிகை ரைசா. பிரபல மாடலான இவர் தனுஷின் வி.ஐ.பி-2 படத்தில் கஜோலுடன் சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து 2018ம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.  

கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்த பேர் கொண்ட படக்குழுவினருடன் படமாக்கும் விதத்தில் கதையொன்றை எழுதினார் கார்த்திக் ராஜு. இதில் ரைசா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத் திரும்பியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கு முன்பும், பின்பும் படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்துக்கு தி சேஸ் என்று பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ஃபர்ஸ்ட் லுக்கில் தலைகீழாக தொங்கும் படி ரைசா உள்ளார். 

இந்த போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயன் பணிபுரிந்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சாபு ஜோசப் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். சூர்ப்பனகை படத்தின் தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மா தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.

இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் இஓர் ளைஞர் ஆகியோருக்கு இடையே ஒரே இரவில் நடைபெறும் கதையாகும். தமிழ், தெலுங்கு மட்டுமன்றி மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. 

இந்த படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள எஃப்.ஐ.ஆர் திரைப்படம் ரைசா கைவசம் உள்ளது. விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். டீஸர் ஏற்கனவே வெளியானது. சமீபத்தில் யார் இந்த இர்ஃபான் அஹ்மத் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு.