வில்லன், குணச்சித்திர பாத்திரம், ஹீரோ என எந்த பாத்திரமாக இருந்தாலும் அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர் பாபி சிம்ஹா. 2012-ம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அறிமுகமானார். 2014-ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. கடைசியாக டிஸ்கோ ராஜா எனும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். 

புத்தம் புதுக் காலை ஆந்தாலஜியைத் தொடர்ந்து, பாபி சிம்ஹா நடிப்பில் சீறும் புலி, வல்லவனுக்கு வல்லவன், உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்தப் படங்களுக்கு இடையே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் வசந்த முல்லை படத்தில் நடித்துள்ளார் சிம்ஹா. கடந்த வருடம் நவம்பர் 6-ம் தேதி சிம்ஹாவின் பிறந்த நாளை முன்னிட்டு, படம் குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 

இந்தப் படத்தை ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ளார். குறும்படங்கள் மூலம் கிடைத்த வரவேற்பால், பாபி சிம்ஹா இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளார். எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. 

பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. ஒளிப்பதிவாளராக கோபி அமர்நாத், இசையமைப்பாளராக பிரேமம் புகழ் ராஜேஷ் முருகேசன், எடிட்டராக விவேக் ஹர்ஷன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். வசந்த முல்லை படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது. 

மேலும், தனது பெயரை இனி சிம்ஹா என்று மட்டும் குறிப்பிடும்படி படக்குழுவினருக்கு பாபி சிம்ஹா அறிவுறுத்தியுள்ளார். இதனால் வசந்த முல்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படக்குழுவினரின் அறிக்கை என அனைத்திலுமே சிம்ஹா என்றே உள்ளது. இந்நிலையில் படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சியை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ருத்ரா எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்ஹா.