இந்த 2020-ம் ஆண்டு மிக மோசமான ஆண்டு என்று தான் கூற வேண்டும். வரிசையாக திரைப்பிரபலங்களின் இழப்பு நம்மை வாட்டி வதைக்கிறது. ஒரு புறம் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலகை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்புவின் மன்மதன், துஷ்யந்தின் மச்சி, விக்ரம் நடித்த கிங், விவேக்கின் சொல்லி அடிப்பேன் ஆகிய படங்களை தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். அவர் சென்னை சாலிகிராமத்தில் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு இன்று நடக்கவிருக்கிறது. கிருஷ்ணகாந்த் இறந்த செய்தி அறிந்தவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகாந்தின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர். 

சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா உயிர் இழந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தான் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மாரைடப்பால் மரணம் இடைந்தார். இந்நிலையில் கிருஷ்ணகாந்த் இறந்துவிட்டார்.

இந்த 2020ம் ஆண்டு இன்னும் எத்தனை உயிர்களை குடிக்கப் போகிறதோ என்று சினிமா ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திரையுலகை சேர்ந்தவர்கள் ஒன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் இறக்கிறார்கள், இல்லை என்றால் மாரடைப்பால் மரணம் அடைகிறார்கள். அடிக்கடி மரண செய்தியாக வருவதை பார்க்க கவலையாகவும், பயமாகவும் இருக்கிறது என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும், இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை தகர்த்தாலும், இந்த வைரஸ் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு இயல்பு நிலை.