2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

இந்தப் படத்தை கடந்த ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில், இந்தப் படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று சூர்யா அறிவித்தார். முன்னணி ஹீரோ ஒருவரின் படம், ஓடிடி தளத்தில் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தியது.

சூர்யாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. விநியோகஸ்தரும் தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகியுமான திருப்பூர் சுப்ரமணியம் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தியேட்டர்கள் அதிபர்கள் கூறியிருந்தனர். சமீபத்தில் இயக்குனர் ஹரி, இந்த விஷயம் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளிவருவது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலோ, நடிகர் சங்கத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில் இது விஷயமாக யார், யாரிடம் பேசுவது என்ற குழப்பமான சூழ்நிலை உள்ளது.

இதில் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நிலை குறித்தும், பட வெளியீட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆன்லைன் டிக்கெட்டிங் மற்றும் வி.பி.எஃப் குறித்தும் நிரந்தரத் தீர்வு காண திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட முத்தரப்பினரும் அமர்ந்து பேசி, எல்லோருடைய கருத்தையும் அறிந்து சுமுகமான நல்ல முடிவினை எடுத்து அதை நடைமுறைக்குக் கொண்டு வந்து செயல்படுத்தித் திரை உலகம் செழிக்க திரையரங்க உரிமையாளர்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்".