ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அஜின்கியா ரஹானேவின் தலைமையில், பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்தன. கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், குழந்தை பிறப்புக்காக இந்தியாவுக்கு திரும்பி வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஜின்கியா ரஹானே இருந்தார். அவரின் எழுச்சியூட்டும் கேப்டன் பதவி, இந்தியாவை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.

இந்நிலையில் ரஹானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது கடைசியாக என்ன தமிழ் திரைப்படம் பார்த்தீர்கள் என ரசிகர் கேட்டதற்கு, சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை சப் டைட்டில்களுடன் பார்த்ததாகவும், அந்தப் படம் மிகவும் பிடித்திருந்ததாகவும், அதில் சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாகவும் தெரிவித்தார். அதோடு இந்தப் படத்தைப் பார்க்கும்படி அஸ்வின் பரிந்துரை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள். 

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்கப்பட்ட இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும் திரையரங்கில் வெளியானதைப் போல பெரும் வரவேற்பைப் பெற்றது.

சூரரைப் போற்று படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றது இப்படம். அந்த வகையில் பொதுப்பிரிவில் சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. 

சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கவிருக்கும் சூர்யா 40 படத்திற்கு தயாராகி வருகிறார். இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

indian cricketer ajinkya rahane praises suriya soorarai pottru