இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான வித்யாபாலன்  நடித்து வெளிவர இருக்கும்  புதிய திரைப்படம் ஷெர்னி. நியூட்டன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமடைந்த இயக்குனர் அமித் மசுர்க்கர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை அபுடன்டியா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

மிரட்டலான வனத்துறை அதிகாரியாக ஷெர்னி திரைப்படத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்து வந்த நிலையில் இத்திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக சில தினங்களுக்கு முன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வித்யாபாலனின்  ஷெர்னி திரைப்படம்  இந்த வருடம் ஜூன் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் குறித்த சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வருகிற ஜூன் இரண்டாம் தேதி  ஷெர்னி படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அமேசான் பிரைம் அறிவித்ததோடு ட்ரைலரின் முன்னோட்டமாக ஒரு சிறிய டீசரை வெளியிட்டுள்ளது.

வனத்துறை அதிகாரி உடையில் அடர் வனப்பகுதியில் வித்யாபாலன் தோன்றும் அந்த டீசரில் வித்யாபாலனின் குரலில் “இந்த வனப் பகுதி எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும் பெண் புலி தனது  பாதையை அறியும்”  என சொல்லும் காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதமாக  ஷெர்னி திரைப்படத்தின்  டிரைலர் வருகிற ஜூன் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.