திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் சித்தார்த். சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்வு செய்து அதில் முழுமூச்சில் ஈடுபட்டு அசத்துபவர். சமீபத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் என அடுத்தடுத்து இரண்டு ரிலீஸ் தந்து பட்டையை கிளப்பினார். அதுமட்டுமல்லாமல் இந்தியன் 2 , சைத்தான் கா பச்சா போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். நாட்டு நடப்பு குறித்தும், சமூக அக்கறை மிகுந்த பதிவுகளை பதிவிடுவது இவரது வழக்கம். மத்திய அரசுக்கு எதிராக சித்தார்த் விமர்சனத்தை முன்வைப்பது புதிதல்ல. மத்தியில் பாஜக பதவியேற்ற காலத்திலிருந்தே மத்திய அரசையும், பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நடக்கும் விஷயங்களையும் சித்தார்த் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார்.

தற்போது லவ் ஜிஹாதை முன் வைத்து உத்தர பிரதேச மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மதம் மாற்றத்துக்கு எதிரான சட்டத்தை சித்தார்த் விமர்சித்துள்ளார். புதிய சட்டத்தின் படி, வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இரண்டு பேரு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும். முறையான விசாரணைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படும்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள சித்தார்த், முதலில் ஒரு கற்பனை உரையாடலைப் பகிர்ந்துள்ளார். அதில் 

அப்பா நான் ஒருவரை காதலிக்கிறேன், அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

அவன் நம் சமூகத்தைச் சேர்ந்தவனா?

இல்லை.

பரவாயில்லை. முதிர்ந்தவனாக நான் உனது காதலை மதிக்கிறேன். உனக்கு என் ஆசிர்வாதங்கள்.

ஓ.. நாம் மாவட்ட நீதிபதியிடம் சென்று அனுமதி பெற வேண்டும். ஒரு ஊபர் வாகனத்தைக் கூப்பிடுங்கள் என்று பதிவு செய்துள்ள சித்தார்த் இதற்குக் கீழ் புதிய இந்தியா என்று ஹாஷ்டேகில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த பதிவில், என்ன தைரியம் இருந்தால் வயது வந்த ஒரு பெண் தான் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்படிச் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுப்பார். அவர்களின் சட்டத்தின் படி யாருக்கும் எதைச் செய்யவும் உரிமை இருக்கக் கூடாது. எதையும் சாப்பிட, பேச, பாட, எழுத, படிக்க, எவரையும் திருமணம் செய்து கொள்ள என எதற்கும் உரிமை கிடையாது. நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களே தெளிவாகச் சொல்லுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்தார்த்த நடிப்பில் உருவாகி வரும் படம் டக்கர். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் லாக்டவுனுக்கு முன்பு வெளியாகி இணையத்தை ஈர்த்தது. இந்த படத்தை கப்பல் புகழ் இயக்குனர் கார்த்தி ஜி.கிரிஷ் இயக்குகிறார். திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயினாக நடிக்கிறார். யோகி பாபு, அபிமன்யு சிங், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் பாணரில் தயாரித்து இருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கவுதம் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.