தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். 


வேட்புமனு தாக்கல் செய்து , தங்களுக்குள்ள அசையும், அசையா சொத்து விவரத்தை வேட்புமனுவில் வெளியிட்டுள்ளனர்.

முதலாவதாக நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தான் முதல்வராக பதவியேற்ற போது 2016-ல் 3.14 கோடியாக இருந்த அசையும் சொத்து, 2021ல் 2.01 கோடியாகக் குறைந்து உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார். இதெல்லாம் நம்புற மாறியா பாஸ் இருக்கு? என்று நெட்டிசன்கள் ஒருபக்கம் கலாய்த்து வருகிறார்கள்.

அதேபோல், 2016-ல் ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்து 2021ல் ரூ. 4.68 கோடியாக மாறியுள்ளது எனவும் 2016-ல் ரூ.33 லட்சமாக இருந்த கடன் தற்போது ரூ.29.75 லட்சமாகக் குறைந்துள்ளதாகவும் வெளியிட்டுள்ளார்.

மேலும்  முதல்வர் பழனிசாமியை தொடர்ந்து துணை முதல்வரும் ஒ. பன்னீர்செல்வம் போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு குறைந்து உள்ளதாகவும், ஓ.பி.எஸ் சொத்து மதிப்பு  பல மடங்கு உயர்ந்துள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. 


2016ல் 55 லட்சமாக இருந்த ஓபிஎஸ் சொத்து மதிப்பு தற்போது 5.19 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், 2016ல் ரூ.98 லட்சமாக இருந்த அசையா சொத்தின் மதிப்பு இப்போது ரூ.2.64 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் தனது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் மேலும்  பூர்வீக சொத்து, நிலங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

stalin and udhanidhi

அடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த முறையும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தற்போது தனக்கு  6.11 கோடி அசையும், அசையா சொத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2016ல் 1 கோடியே 11 லட்சத்து 59 ஆயிரத்து 079 ஆக இருந்த அசையும் சொத்து தற்போது 5 கோடியே 25 லட்சத்து 37 ஆயிரத்து 646 கோடியாக உயர்ந்துள்ளது. 

 2016-ல் ரூ. 4.72 கோடியாக இருந்த அசையா சொத்து, 2021-ல் ரூ.4.94 கோடியாக உள்ளது. தனது மனைவி துர்காவுக்கு ரூ. 53 லட்சத்தில் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி 2021 சட்டமன்ற தேர்தலில்தான் முதல் முறையாகப் போட்டியிடுகிறார்.இவரின் சொத்து மதிப்பு  ஸ்டாலினின் தற்போதைய சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை 2018ல் துவங்கினார். கட்சி துவங்கியதும் 2019 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக மநீம போட்டியிட்டு, 3.75 % ஓட்டுகளைப் பெற்றது. தற்போது முதல் முறையாகத் தமிழகச் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 154 இடங்களில் போட்டியிடுகின்றனர். மேலும்  சரத்குமார் மற்றும் பாரிவேந்தருடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக எதிர்த்துப் போட்டியிடும் கமல், நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். 


வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு, தனது சொத்து விபரங்களையும் சமர்ப்பித்து உள்ளார். கமலின் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.131.8 கோடி. அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.45 கோடி எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் கமல் இருக்கிறார். 

மேலும் தனக்கு மனைவி மற்றும் தன்னை சார்ந்திருப்பவர்கள் யாரும் கிடையாது என கமல் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.


சென்னையில் தனக்குச் சொந்தமான கமர்சியல் கட்டிட மதிப்பு ரூ.92.05 கோடி, ரூ.19.5 கோடி மதிப்பில் 2 வீடுகள் உள்ளது. லண்டனில் உள்ள ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தில் தனக்கும் பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சொந்தமாக விவசாய நிலம் தனது பெயரில் ரூ.17.79 கோடி மதிப்பிலான 35.59 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், முழு சொத்து விபரங்கள் 2019 -20 வருமான வரி தாக்கலின் படி தனது ஆண்டு வருமானம் ரூ.22.1 கோடி என கமல் தெரிவித்துள்ளார். 

தனது  வங்கிக் கணக்கில் ரூ.2.43 கோடி உள்ளது எனவும், மியூச்சுவல்பண்ட்சில் ரூ.26.1 லட்சமும், இன்சூரன்ஸ் ரூ.2.39 கோடி, தனிநபர் கடன் ரூ.36.24 கோடி, பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்ட வாகன மதிப்பு ரூ.3.69 கோடி எனத் தெரிவித்துள்ளார். 

seeman

அடுத்ததாகச் சீமான் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், ‘அவருடைய அசையும் சொத்தும் 31,06,500 ரூபாயும் என்றும் அசையா சொத்து ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவிக்கு அசையும் சொத்து 63,25,031 ரூபாயும், அசையா சொத்து 25,30,000 ரூபாயும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 4 ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2019-2020-ம் ஆண்டு வருமானம் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.