நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை 2018ல் துவங்கினார். கட்சி துவங்கியதும் 2019 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக மநீம போட்டியிட்டு, 3.75 % ஓட்டுகளைப் பெற்றது. தற்போது முதல் முறையாகத் தமிழகச் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 154 இடங்களில் போட்டியிடுகின்றனர். மேலும்  சரத்குமார் மற்றும் பாரிவேந்தருடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. 


இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக எதிர்த்துப் போட்டியிடும் கமல், நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். 


வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு, தனது சொத்து விபரங்களையும் சமர்ப்பித்து உள்ளார். கமலின் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.131.8 கோடி. அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.45 கோடி எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் கமல் இருக்கிறார். 


மேலும் தனக்கு மனைவி மற்றும் தன்னை சார்ந்திருப்பவர்கள் யாரும் கிடையாது என கமல் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.


சென்னையில் தனக்குச் சொந்தமான கமர்சியல் கட்டிட மதிப்பு ரூ.92.05 கோடி, ரூ.19.5 கோடி மதிப்பில் 2 வீடுகள் உள்ளது. லண்டனில் உள்ள ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தில் தனக்கும் பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சொந்தமாக விவசாய நிலம் தனது பெயரில் ரூ.17.79 கோடி மதிப்பிலான 35.59 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், முழு சொத்து விபரங்கள் 2019 -20 வருமான வரி தாக்கலின் படி தனது ஆண்டு வருமானம் ரூ.22.1 கோடி என கமல் தெரிவித்துள்ளார். 


தனது  வங்கிக் கணக்கில் ரூ.2.43 கோடி உள்ளது எனவும், மியூச்சுவல்பண்ட்சில் ரூ.26.1 லட்சமும், இன்சூரன்ஸ் ரூ.2.39 கோடி, தனிநபர் கடன் ரூ.36.24 கோடி, பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்ட வாகன மதிப்பு ரூ.3.69 கோடி எனத் தெரிவித்துள்ளார். 


பணக்கார வேட்பாளர் பட்டியலில் கமலை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் இடம் பிடித்துள்ளார். 


ஆர். மகேந்திரனின் சொத்து மதிப்பானது, ‘’ மகேந்திரன் மற்றும் அவரது மனைவி பெயரிலும் சேர்த்து ரூ.160 கோடி சொத்து இருப்பதாகவும்,  இவர் பெயரில் மட்டும் ரூ.18 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.