புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பல ஆண்டு கால கனவு திட்டமான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணையை பிறப்பித்தது. திட்டத்தின் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 6971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படுகிறது.


காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.


வெள்ள பெருக்கின் போது காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பது இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவாக இருந்ததை  நிறைவேற்ற முதல் கட்டபணிகளை இன்று முதல் தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மேலும் இத்திட்டத்தின் மூலம் காவிரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20% அதிகரிக்கப்பட இருக்கிறது.