தேசிய குற்றவியல் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் நாள் ஒன்றுக்கு 87 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளன, மொத்தமாக ஆண்டு முழுவதும் பெண்களுக்கு எதிராக 4,05,861 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 7% அதிகமாக உள்ளது. அதேபோல் 2019-ம் ஆண்டில் நாடு முழுவதும் 32,033 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கணவர் அல்லது உறவினர்களால் கொடுமை செய்யப்பட்ட வழக்கு 30.9%, பெண்கள் மீதான தாக்குதல் 21.8% மற்றும் பெண்கள் கடத்தல் வழக்கு 17.9% என பதிவாகியுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில், ஒரே ஆண்டில் 59,853 சம்பவங்களுடன் உத்தரப்பிரதேசம்தான் முதல் இடத்தில் உள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், மத்தியப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உத்தரப்பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆசிட் தாக்குதலிலும் பாலியல் வன்கொடுமை முயற்சிகளின் எண்ணிக்கையிலும் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

மேலும் போக்ஸோ சட்டத்தின் கீழ், 7,444 வழக்குகளுடன் உத்தரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும் மூன்றாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும் உள்ளன. நிர்பயா, கத்துவா சிறுமி, ஹைதராபாத் பெண் மருத்துவர், உன்னாவ் சிறுமி என நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. ஆனால் இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு சொற்பமாகவே தண்டனை கிடைத்துள்ளதாக கண்டனப் பதிவுகள் சமூக வலைதளங்கள் முழுக்க விவாதிக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவமும், அவருடைய உடல் அவரின் பெற்றோர் அனுமதியின்றி எரிக்கப்பட்ட நிகழ்வும் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின்படி, கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்து வந்த 20 வயதான பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இதுகுறித்து வெளியில் செய்தி கசியாமல் இருக்க அப்பெண்ணின் நாக்கை அந்தக் கும்பல் வெட்டியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கழுத்து முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் செவ்வாய்க்கிழமை பலியானார். உ.பி. காவல்துறை தங்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை அப்பெண்ணின் உடல் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு உ.பி.காவல்துறையினரால் எரியூட்டப்பட்டார். குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் காவல்துறை அவரது உடலை எரியூட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்படி அடுக்கடுக்கான செய்திகளை முன்னிறுத்திதான், பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் கீழ் குற்றவாளிகள் மற்றும் கற்பழிப்பாளர்கள் சுதந்திரமாக உலவி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பெண்களைப் பாதுகாக்கத் தவறியதால், முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமெனவும், மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ’உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்ளலாம்’ என்று கடுமையாக சாடியுள்ளார்.

ஹத்ராஸ் மற்றும் பால்ராம்பூரில் நடந்த இரண்டு சம்பவங்களும் புதுடெல்லியின் நிர்பயா சம்பவத்தை நினைவூட்டியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.