கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொது மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி வந்தது. 

இதன் காரணமாக, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழி முறைகள் பல வழிகளில் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

இதன் காரணமாக, நேரடி பண பரிவர்த்தனையைத் தவிர்க்கும் மாறும், அதற்குப் பதிலாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு அனைவரும் மாற வேண்டும் என்றும், மத்திய அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

அதன் தொடர்ச்சியாக, தமிழ் நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் சாலையோரம் உள்ள கடைகள், உணவகங்கள் என பெரும்பாலான இடங்களில், வாடிக்கையாளர்கள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். 

குறிப்பாக, இந்தியாவின் பல சிறு குறு தொழில் கூடங்களும், சிறு சிறு கடைகளும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தி வருகின்றன. மாறி வரும் நவீன உலகில், டிஜிட்டல் முறைக்கு மக்கள் மாறுவது, ஒரு வகையில் முன்னேற்றம் என்று பார்க்கப்பட்டாலும், இது கால சூழலில் டிஜிட்டல் ரீதியான சைபர் குற்றங்கள் மற்றும் இணைய வழிக் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.

இது தொடர்பாக, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும், இது போன்ற சைபர் குற்றங்கள் வழியாக இந்தியர்களை ஏமாற்றி 1.2 லட்சம் கோடி ரூபாய் வரை பணம் ஏமாற்றப்பட்டு உள்ளது தெரிய வந்து உள்ளது. 

இது தொடர்பாக, இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான TRAI கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 3.4 சதவிகிதம் அதிகரித்து, தற்போது 74.3 கோடியாக உயர்ந்து உள்ளது” என்று, கூறியுள்ளது.

அதே போல, இது குறித்து உத்தரகாண்ட் மாநில சைபர் க்ரைம் காவல் துறையினர் கூறுகையில், “நாடு முழுவதும் 1.2 பில்லியன் பேர் அதாவது சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், இவர்கள் அனைவரும் தினமும் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர்” என்றும், கூறியுள்ளனர்.

அதே போல், “இந்த கொரோனா காலங்களில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க விரும்பும் மக்கள், போலியான இணையதள முகவரியின் மூலம் தங்களது பணத்தைச் செலுத்தி ஏமாறுகிறார்கள் என்றும், முக்கியமாகக் கேள்விப்படாத புதிய புதிய இணையதளங்கள் மூலம் பொருட்கள் வாங்குவதன் மூலம் சிலர் தங்களது பணத்தை இழக்கிறார்கள்” என்றும், அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இப்படியாக, இணையக் குற்றங்களால் பாதிக்கப்படும் பொது மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க வேண்டும் என்றும், அல்லது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க வேண்டும் என்றும், வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.