கொரோனாவை சமாளிக்க, ஒவ்வொரு மாநில அரசும் - யூனியன் பிரதேச முதல்வர்களும், அவரவர்க்கு ஏற்ப ஒவ்வொரு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், முக்கியமான ஒரு திட்டத்தை தன் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய கெஜ்ரிவால், 'பொதுமக்களின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்களை நேரடியாக வினியோகம் செய்யும் திட்டம், டில்லியில் அமலுக்கு வரவுள்ளது' என்றுள்ளார்.

பொது வினியோகத் திட்டத்தின் கீழ், மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பொருட்களை, பொதுமக்கள் கடைகளுக்குச் சென்று வாங்குவதில், பல்வேறு சிரமங்கள் இருப்பதுடன், முறைகேடுகள் நடைபெறுவதாக டெல்லியில் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்தன. இதனால், ரேஷன் பொருட்களை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் திட்டம், டெல்லியில் அறிமுகமாகிறது.

சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையிலிருந்த இத்திட்டத்தை நிறைவேற்ற, அரசு தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், துணை நிலை ஆளுனர் தரப்பில், பல்வேறு விளக்கங்கள், சந்தேகங்களைத் தொடர்ந்து எழுப்பியதால், இப்போதைக்குத் தாமதம் ஏற்பட்டிருந்தது. இப்போது கொரோனா நேரம் என்பதால், பல்வேறு தடைகளைத் தாண்டி, இத்திட்டம் அவசரமாக அமலுக்கு வருகின்றது. இது குறித்து, முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நேற்று கூறியவற்றின் தொகுப்பு இங்கே :

``பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்களைத் தருவதற்கான, 'முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா' திட்டத்திற்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், 'பேக்' செய்யப்பட்டு, நேரடியாக வீடுகளில் வினியோகம் செய்யப்படும். இந்த புரட்சிகர திட்டத்திற்கு, ஒப்பந்தப் புள்ளி கோருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள், ஆறு மாதங்களுக்குள் முடிவடையும்.இந்த திட்டத்துடன், மத்திய அரசின், 'ஒரே நாடு; ஒரே ரேஷன்' திட்டமும், அமலுக்கு வரும். ரேஷன் கடைகளுக்கு வர விரும்பாதவர்களுக்கு மட்டுமே, நேரடியாகப் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். கடைகளுக்கு வர விரும்புவோர், வழக்கம் போல் வந்து, பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், அரசு அறிவித்து தற்போது ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் இந்தக் கனவுத் திட்டம் நிறவேறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைக் காணொலியில் அறிவித்த கேஜ்ரிவால், ``வீட்டிற்கே ரேஷன் பொருட்கள் வந்து சேரும், ரேஷன் பொருட்களை ஏழைகள் சுயகௌரவத்துடன் பெற்றுப் பயன்படுத்தலாம்" என்று கூறி இருந்தார். இதன் மூலம் மாநில அரசின் கனவு நனவாகும் என்றும் பெருமைப் பட்டுள்ளார் கெஜ்ரிவால்.

பிரதமரின் ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டமும், தனது வீடு தேடிச் செல்லும் ரேஷன் பொருட்கள் திட்டமும் ஒரே நாளில் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்.

மொத்தம் 2016 ரேஷன் கடைகளில் மூலம் டெல்லியில் லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள். தற்போது மானிய விலை அரிசி தேசியப் பாதுகாப்பு 2013 சட்டப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதன்பயன் தற்போது நீட்டிக்கப்பட்டு விரிவாக்கம் பெறுகிறது என்கிறார் கேஜ்ரிவால்.

முன்னதாக இந்த நலத்திட்டம் குறித்து மத்திய அரசுக்கும் கேஜ்ரிவால் அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

- பெ.மதலை ஆரோன்