வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், 25 கி.மீ., வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: புரெவி புயலானது பாம்பனுக்கு கிழக்கு தென்கிழக்கே 420 கி.மீ., தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு வடகிழக்கே 600 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு இலங்கையைக் கடந்து நாளை காலை மன்னார் வளைகுடா பகுதியாக குமரிக்கடல் பகுதிக்கு வரக்கூடும். தற்போது புயலானது 18 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இதனால், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதிகனமழையும், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமையும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும்.தரைக்காற்று, 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வரையும், இடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

வங்கக்கடலில் உருவான புரெவி புயலானது தற்போது 25 கி.மீ., வேகத்தில் நகர்வதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று இரவில் இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.,4ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என முதல்வரிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார். தமிழக மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புரெவி புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

``இன்று (டிசம்பர் 2) அதிகாலை 2.30 மணி நிலவரப்படி புரெவி புயல் பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இப்புயல் 6 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவில் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது.

இதனால், இலங்கையின் கிழக்குப் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது. மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

திரிகோணமலை அருகே கரையைக் கடந்த பின் புரெவி புயல் அதே வேகத்துடன் மேற்கே நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை அடைகிறது.

தொடர்ந்து நாளை மறுநாள் (டிச.4) அதிகாலை குமரி - பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையைக் கடக்கும். மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் பாம்பன் - குமரி இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

இதனால், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்"