மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்த சட்டங்கள் காலாவதியாகிவிடும் எனவும் போராடி வருகின்றனர். 

இந்தச் சூழலில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை கடந்து  தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து  கடந்த 27-ம் தேதி முதல் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி  போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். 


தொடர்ந்து 7-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 
இந்த போராட்டம் குறித்து முதன்முதலாக ஒரு வெளிநாட்டு தலைவர் கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.குருநானக்கின் 551 வது பிறந்த நாளையொட்டி இணையதள நிகழ்ச்சியில் பங்கேற்ற கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துயிருப்பது விவாத பொருளாக மாறியிருக்கிறது.

உலகத் தலைவர்களின் வரிசையில் விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு முதல் ஆதரவுக் குரலாக, “ உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார்..
``இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்திகளை தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கிறது. அதை என்னால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. நிலைமை கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது.அமைதியான வழியில் உரிமைக்காகப் போராடுபவர்களுக்கு கனடா என்றுமே துணை நிற்கும் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் அனைவரும் குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். எங்களது இந்தக் கவலை குறித்து இந்திய அதிகாரிகளின் பார்வைக்கும் கொண்டு சென்றிருக்கிறோம். நாம் அனைவரு இணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் இது” என்று ஜஸ்டின் ட்ரூடோ பேசியிருக்கிறார். 


ஜஸ்டினின் கருத்து தொடர்பாக சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி டுவிட்டரிவில் வெளியிட்ட பதிவில், இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. இது மற்றொரு நாட்டின் அரசியலுக்கு தீனி இல்லை. நாங்கள் எப்போதும் மற்ற நாடுகளின் உரிமைகளை மதிக்கிறோம். அதேபோல் நீங்களும் மதிக்க வேண்டும். மேலும் மற்ற நாடுகள் இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு, பிரதமர் மோடி இந்த பிரச்சினையை விரைந்து தீர்க்க வேண்டும் என்று தெரிவித்துயிருக்கிறார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதை விவசாயிகள் நிராகரித்தை தொடர்ந்து மீண்டும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்திருந்தார். அனைத்துத் தலைவர்களையும் அழைக்காமல் 32 குழுத் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்ப்பதால் அந்த அழைப்பை விவசாயிகள் நிராகரித்துவிட்டனர்.


பேச்சுவார்த்தை தொடர்ந்து தள்ளிக்கொண்டு செல்ல, மறுப்பக்கம் போராட்டம் தொடர்ந்து தீவீரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதால் பிரதமர் மோடி என்ன செய்ய போகிறார் என எதிர்ப்பார்ப்பு வலுத்துயிருக்கிறது.