மனைவியை குடும்பம் நடத்த வர சொல்லி, தனது சொந்த மகளையே தூக்கில் தொங்க விட்டு கொடூர தந்தை ஒருவர், மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மலட் பகுதியைச் சேர்ந்த அஜய் கவுட் என்பவர், அங்குள்ள ஒரு மீடியா தனியார் நிறுவனத்தில் ஓவியராக வேலை பார்த்து வருகிறார்.

அதே நேரத்தில், உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இவரது மனைவி பூஜா உடன் அவர் வசித்து வந்தார். 

அஜய் கவுட் -  பூஜா தம்பதிகளுக்குக் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். தற்போது, இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.

இப்படியான சூழலில், கணவன் - மனைவி இடையே கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இப்படியாக அடிக்கடி இருவருக்குள்ளும் சண்டை வந்துகொண்டே இருந்த நிலையில், இருவருமே கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இப்படியாக, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, கணவன் - மனைவி இடையே மீண்டும் சண்டை வந்து உள்ளது. இதனால், கணவன் மீது கோபம் அடைந்த அவரது மனைவி பூஜா, கணவரோடு சண்டைபோட்டு விட்டு தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்று உள்ளார்.

அது முதல், பூஜா தனது அம்மா வீட்டிலேயே தங்கிய நிலையில், இவரின் மகள் மற்றும் மகனோடு அஜய் தனியாக தன்னுடைய வீட்டில் வசித்து வந்திருக்கிறார். 

அதே நேரத்தில், மனைவி பூஜாவுக்கு அடிக்கடி போன் செய்து “தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி” அவரது கணவன், அஜய் கவுட் கட்டாயப்படுத்திக்கொண்டே சண்டை போட்டு வந்திருக்கிறார். ஆனால், அவர் வர மறுத்திருக்கிறார்.

அத்துடன், “உன்னுடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பம் இல்லை” என்றும், அவர் முற்றிலுமாக மறுத்துவிட்டார்.

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த கணவன் அஜய் கவுட், கடந்த 7 ஆம் தேதி சனிக் கிழமை அன்று தன்னுடைய வீட்டில் தன்னுடனேயே இருந்த தனது 13 வயது மகளை, ஒரு கயிறில் கட்டி அவரை தூக்கில் தொங்க விட்டாரிருக்கிறார். 

மேலும், கொடூரத்தின் உச்சமாக அதை போட்டோ எடுத்து, தனது மனைவிக்கு அனுப்பி வைத்த அந்த கொடூர கணவன், தனது மனைவியை “என்னுடன் குடும்பம் நடத்த வா” என்று, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், தூக்கு கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த அந்த 13 வயது சிறுமி, வலிதாங்க முடியாமல் பயந்து அலறி துடித்து உள்ளார். 

இப்படி, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்குள்ள அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து உள்ளனர். அப்போது, சிறுமியை அவரது தந்தை தூக்கில் ஏற்றியதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து, அவரை தள்ளி விட்டுவிட்டு, அவரிடமிருந்து அந்த சிறுமியை காப்பாற்றி உள்ளனர். 

அதனையடுத்து, அந்த அக்கம் பக்கத்தினரே அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளனர். இது தொடர்பாக, உடனடியாக விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தந்தையால் தனக்கு நேர்ந்த இந்த கொடூரச் செயல் குறித்து விளக்கியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் தந்தை  அஜய் மீது வழக்குப் பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.