29 வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடரும் நிலையில், “புதிய திருத்தங்களை ஏற்கமாட்டோம்” என்று, மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க விவசாயிகள் நிபந்தனை விதித்து உள்ளனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு உள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பல கட்டங்களாகத் தோல்வி அடைந்துள்ளன. 

குறிப்பாக, தற்போது 2 வது அலையாக பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல், கடுமையான பனி மற்றும் குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகள் தங்கள் போராடத்தை துளியும் பின்வாங்காமல் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இதனால், விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 29 வது நாளை நீடித்து வருகிறது. 

முக்கியமாக, முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான நேற்றைய தினம் விவசாயிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக, போராட்டக் களத்திலும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன. 

அதில், முக்கிய நிகழ்வாக, “விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கிசான் தினமான நேற்றைய தினம் ஒரு வேளை உணவை தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு விவசாயிகள் கோரிக்கை” விடுத்திருந்தனர்.

மேலும், விவசாய தினத்தையொட்டி டெல்லி போராட்டக்களங்களில் மேலும் ஏராளமான விவசாயிகள் நேற்றைய தினம் வந்திருந்தனர். 

அதன் படி, பஞ்சாப்பில் இருந்து வயது முதிர்ந்த பெண் விவசாயிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் சிங்கு, திக்ரி உள்ளிட்ட போராட்ட பகுதிகளில் வந்து 

கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறும், மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் விவேக் அகர்வால், 40 விவசாய அமைப்புகளுக்குக் கடந்த 20 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

அதன் படி, மத்திய அரசுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து விவசாய அமைப்புகள் நேற்றைய தினம் ஆலோசனை நடத்தின. இதில், விவசாய அமைப்புகளுக்கு இடையே கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து சந்திப்புகளும் நடந்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில், நேற்று மாலையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசும்போது, “மத்திய அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர தயாராக இருக்கிறோம்” என்றும், குறிப்பிட்டார்.

“ஆனால், அதற்கான வலுவான பரிந்துரைகளை எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு திறந்த மனதுடன் வர வேண்டும்” என்றும், கோரிக்கை வைத்தனர். 

“வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதாகக் கூறுவது அர்த்தமற்றது என்றும், இந்த திருத்தங்களை ஏற்கமாட்டோம் என உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் ஏற்கனவே நாங்கள் தெரிவித்து விட்டதாகவும்” அவர்கள் கூறினார்கள்.

அதே போல், டெல்லி நொய்டாவில் கடந்த 2 தேதி முதல் போராடி வரும் பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவரான ஷியோ ராஜ் சிங், பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில், “வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுங்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும், விவசாயிகள் கமிஷன் அமைக்கவும் சட்டம் 
இயற்றுங்கள்” என்றும், அவர் கோரிக்கை வைத்தார். நொய்டா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ள இந்த கடிதம், மாவட்ட ஆட்சியர் வழியாகப் பிரதமர் 
அலுவலகத்துக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் ராகுல் காந்தி இன்று குடியரசுத் தலைவரைச் சந்திக்கப் பேரணியாகச் சென்றார். அப்போது, அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.