குடும்பத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர், தங்களது உறவினர் ஒருவரை பால்கனியில் தொங்கவிட்டு, கடுமையாகத் தாக்கி கீழே தள்ளிவிட முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த கடோல்கர் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், ஏராளமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது, அந்த  அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், அவர்களின் உறவினர் ஒருவரிடம் சண்டைபோட்டுக்கொண்டே, முதலாம் தளத்தின் பால்கனியில் இருந்து தரைத் தளத்திற்கு அவரை தள்ளிவிட முயன்று உள்ளனர். 

இதனால், இருவர் சேர்ந்துகொண்டு, உறவினர் ஒருவரை அந்த பால்கனியில் அந்தரத்தில் தொங்க விட்டபடி மிக கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

அதே நேரத்தில், அந்த சண்டையின் போது, அங்கே நின்றிருந்த மற்ற உறவினர்கள், அந்த இருவரையும் அவரை அடிக்காமல் தடுத்துக்கொண்டும், மறு கையில் மாடியில் தொங்கிக்கொண்டிருந்த வரை கீழே விழாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டும் அவர்கள் இருவரிடமும் போராடிக் கொண்டு இருந்துள்ளனர். 

அப்போது, அப்போது முதல் மாடியின் பால்கனியில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தவரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் முன்பு கூடி இந்த சண்டையை வேடிக்கை பார்த்து உள்ளனர்.

அப்போது. அங்கு அதிக அளவிலான பொது மக்கள் கூடுவதைப் பார்த்த சண்டை போட்ட அந்த இருவரும் அவரை அடிப்பதை நிறுத்தி, அவரை மேலே தூக்கி விட்டனர். 

ஆனால், அங்கு நடந்த இந்த சண்டைக் காட்சிகளையெல்லாம் அங்கு கூடி நின்று வேடிக்கை பார்த்த பொது மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்டு, தற்போது வெளியிட்டு உள்ளனர்.

இதனால், இந்த குடும்ப சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

இதனிடையே, குடும்பத் தகராறு காரணமாக, அந்த இருவரும் மற்றொருவரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட முயன்றதாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில் போலீசார் இது வரை வழக்குப் பதிவு எதுவும் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.