தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் எனிமி. நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நேருக்கு நேர் மோதும் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் எனிமி திரைப்படத்தை அரிமா நம்பி இருமுகன் நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான எனிமி திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷாலின் அடுத்த ஆக்ஷன் அதிரடி திரைப்படமாக வெளிவர இருக்கிறது வீரமே வாகை சூடும்.

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாட்டி நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் தூ.ப.சரவணன் இயக்கியுள்ள வீரமே வாகை சூடும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து டீசர் மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.