வரதட்சணை கொடுமையின் உச்சபட்சமாக, மருமகளை மாமியாரே மாமனார் முன்பு நிர்வாணப்படுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  பாதிக்கப்பட்ட இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூரமான வரதட்சணை சம்பவம் அரங்கேறி அனைவரையும் கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சமீப காலமாகக் கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் அடுத்தடுத்து பல இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அரங்கேறி,  இந்தியாவையே உலுக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் அதே போன்ற ஒரு வரதட்சணை கொடுமை அரங்கேறி அனைத்து
தரப்பினரையும் அதிர வைத்திருக்கிறது. 

ராஜஸ்தான் மாநிலம் பாகூரை சேர்ந்த பைருலால் என்பவரின் 18 வயது மகள் பிரியா என்ற இளம் பெண்ணுக்கு, கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள 
பில்வாரா மாவட்டம் பந்திர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் சான்ஸி என்ற இளைஞருடன், அவரது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து கொடுத்து உள்ளனர்.

திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை வீட்டினர் அந்த புது பெண் பிரியாவிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்யத் தொடங்கி உள்ளனர். 
பிரியாவின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் இருவரும் வரதட்சணை கேட்டு மருமகளைக் கடுமையாகக் கொடுமைப்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதனால், கணவன் வீட்டில் கொடுமைகளை அனுபவிக்க முடியாத இளம் பெண் பிரியா, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று உள்ளார்.

இதனையடுத்து, கணவர் முகேஷ் சான்ஸி மற்றும் அவரது பெற்றோர், பிரியா வீட்டிற்குச் சென்று அவரை சமாதானப்படுத்தி மீண்டும் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று உள்ளனர். 

பின்னர், சில நாட்கள் சென்ற நிலையில், மீண்டும் அவர்கள் வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர். 

அதன் படி, கடந்த 20 ஆம் தேதி அன்று, மீண்டும் வரதட்சணை கேட்டு மருமகள் பிரியாவை அவரது மாமனாரும், மாமியாரும் அடித்து உதைத்து உள்ளனர். 

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் பிரியா, அடுத்த 2 நாட்கள் சென்ற நிலையில் 22 ஆம் தேதி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். 

இதனால், பதறிப்போன மாமனாரும், மாமியாரும் பிரியாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு பிரியாவுக்கு தீவிரமாகச் 
சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திடீரென்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், இளம் பெண் பிரியா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு, தனது தற்கொலைக்கான காரணம் தொடர்பாக அவர் வீடியோ ஒன்றைப்
பதிவிட்டு இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. 

அந்த வீடியோவில், “என்னிடம் வரதட்சணை கேட்டு எனது மாமனார், மாமியார் ஆகியோர் என்னை உடல் ரீதியாக பல்வேறு கொடுமைகளைச் செய்து வந்தனர்” என்று, குற்றம்சாட்டி இருந்தார்.

முக்கியமாக, “எனது மாமனார் முன்னால், என்னை எனது மாமியார்  நிர்வாணப்படுத்தினர் என்றும், அதன் காரணமாகவே நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்” என்றும், அவர் கண்ணீர் மல்க பேசியிருந்தார்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து, பிரியாவின் கணவர், மற்றும் மாமனார் - மாமியார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.