மும்பை அலிபாக் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை போலீசார் நவம்பர் 4 ம் தேதி, கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார். அவரது கைதுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விதி மீறல் எதுவும் இல்லை என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது காவலர்களை தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி, அவரது மனைவி மற்றும் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை அலிபாக் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்த வழக்கில் அர்னாப் மட்டுமன்றி, வழக்கோடு தொடர்புடைய ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சார்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் தங்களை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மகாராஷ்டிர அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாக அர்னாப் கோஸ்வாமி தனது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் மூவரும் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதால் இடைக்கால ஜாமீனில் தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

இதனை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, எம்.எஸ்.கார்னிக் ஆகியோர்அடங்கிய அமர்வு, மூவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இடைக்கால மனுவை நாங்கள் தள்ளுபடி செய்திருப்பது, விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் வழக்கமான ஜாமீன் மனு மூலம் நிவாரணம் பெறுவதை பாதிக்காது. மனுதாரர்களுக்கு விசாரணை நீதிமன்றத்தை நாடும் உரிமை உள்ளது. ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டால் அது குறித்து விசாரணை நீதிமன்றம் 4 நாள்களில் முடிவு செய்யும் என்று நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அர்னாப் கோஸ்வாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அர்னாப் கோஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.