பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. முதல்வர் நிதிஷ் குமார், ஆட்சியை தக்க வைப்பாரா அல்லது தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று பிற்பகலில் தெரியவரும் என சொல்லப்பட்டது.

2015ம் ஆண்டு தேர்தலில் மிகவும் மோசமாக தோல்வி அடைந்ததை தொடர்ந்து,  பல ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது இடதுசாரி கட்சிகள். தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 29 தொகுதிகள் இடதுசாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சி.பி.ஐ. (எம்.எல்) 19 தொகுதிகளிலும் சி.பி.ஐ 6 தொகுதிகளிலும் சி.பி.எம். 4 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

இடதுசாரி கட்சிகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலில் போட்டியிட்டது. தற்போதைய நிலவரப்படி அகியாவுன், அர்ராஹ், அர்வால், பல்ராம்பூர், பிபூதிப்பூர், தரௌலி, தரௌந்தா, தும்ரௌன், கோசி, காரகத், மஞ்சி, மதிஹனி, பலிகஞ், தரரி, வரிஸ்நகர், சிராடேய், பச்வாரா மற்றும் பக்ரி தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது.

முன்பு பீகாரின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்த இடதுசாரி கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் வீழ்ச்சியை சந்தித்தது. 2010 தேர்தலில் சி.பி.ஐ. ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற, 2015ம் ஆண்டு சி.பி.ஐ. (எம்.எல்.) மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. 2015ம் ஆண்டு தேர்தலில் சி.பி.ஐ மற்றும் சி.பி.எம். ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், பீகார் தேர்தலில் ஜேடியூ தோற்று விட்டதாக அந்தக் கட்சியின் தலைவரான கேசி தியாகி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தோல்விக்கான காரணமாக, கொரோனாவை அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீகார் தேர்தலில் நிதீஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வரும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன. ஆனால் அது பலிக்குமா என்று தெரியவில்லை. காரணம் இந்த நிமிடத்தில் பாஜக - ஜேடியூ கூட்டணிதான் முதலிடத்தில உள்ளது. அடுத்த இடத்தில், ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி 2வது இடத்தில் உள்ளது. தனிப் பெரும் கட்சியாக பாஜகவும், 2வது இடத்தில் ஆர்ஜேடியும் உள்ளன. நிதீஷ் கட்சிக்கு 3வது இடம்தான் கிடைத்துள்ளது. எனவே எப்படிப் பார்த்தாலும் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இந்த நிலையில் ஜேடியூவுக்கு இது தோல்விதான் என்பதை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே சி தியாகி ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து தியாகி, ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லும்போது, "கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம், பொருளாதார பாதிப்பு ஆகியவைதான் நிதீஷ் குமாரையும் அவரது கட்சியையும் கை விட்டு விட்டன. மற்றபடி தேஜஸ்வியாதவால் நிதீஷ் குமாருக்கு பின்னடைவு என்பதை ஏற்க முடியாது" என்று கூறியுள்ளார் தியாகி.

தியாகி மேலும் சொல்லுகையில், "பிரான்ட் நிதீஷ் அப்படிதேதான் உள்ளது. இயற்கையின் கோபத்திற்கு நாம் என்ன செய்ய முடியும். சிராக் பாஸ்வான் ஒரு பக்கம் உள்ளடி வேலைகளைப் பார்த்து விட்டார். பாஜக கூட்டணி என்று சொல்லிக் கொண்டே எங்களை பாதிக்கும் வகையில் அவர் செயல்பட்டார். அவரது பிரச்சாரம் முழுவதும் நிதீஷ் குமாரை மையப்படுத்தியே இருந்தது" என்றார் தியாகி கோபமாக.

ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் பரஸ்பர வாக்குகள் பரிமாற்றம் மட்டுமின்றி இரண்டு முக்கியமான பணிகளை இந்த மகா கூட்டணிக்கு செய்தது இடதுசாரி கட்சிகள். இம்மூன்று கட்சிகளும், தொண்டர்கள் அடிப்படையிலான கட்சிகள். இது இந்த கூட்டணியை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்க்க உதவியது. அவர்களின் விசுவாசம் சந்தேகத்திற்கு இடம் இல்லாத ஒன்று. ஏன் என்றால் அவர்கள் கருத்தியல் ரீதியாக பாஜகவிற்கு எதிர்முனையில் தான் இருக்கின்றார்கள்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் இடதுசாரிகளுக்கு ஆதரவு இருக்கும், குறிப்பாக சி.பி.ஐ. (எம்.எல்)க்கு சாதகமாக முடிவுகள் வரும் என்று கூறியது. ஆர்.ஜே.டி தலைமையிலான மகாகத்பந்தன் வழங்கிய பொருளாதார நீதிக்கான செய்தி அவர்களின் தொண்டர்களால் பலமாக வரவேற்கப்பட்டது. இந்தியா டுடே-ஆக்சிஸ் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்பு முடிவுகள் சிபிஐ (எம்.எல்) போட்டியிட்ட 19 இடங்களில் 12-16 இடங்களை வெல்லும் என்று கணித்திருந்தது.

இருப்பினும் மகாகத்பந்தன் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் கடுமையான போட்டிகளை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் என்.டி.ஏவைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் முன்னிலை வகித்து வந்தாலும் தற்போது பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

மாலை 4 மணிவரை பீகாரில் 50 சதவீதம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. மொத்தம் 4.16 கோடி வாக்குகள் பதிவாகிய நிலையில் பாதி மட்டுமே எண்ணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.