“உலகின் மாசுபட்ட 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளது” ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் நாம் எப்படியான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த ஆய்வு.

உலக அளவில் மிகவும் மாசடைந்த 30 நகரங்களன் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 20 நகரங்கள் இடம் பெற்று உள்ளன. அதிலும், உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி திகழ்கிறது என்று, அந்த புதிய ஆய்வறிக்கை கூறுவது வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

இது தொடர்பாக சுவிஸ் அமைப்பான ஐ.க்யூ ஏர் (IQAir) என்கிற அமைப்பு, புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி, புதிய அறிக்கையை அந்த அமைப்பு தற்போது தயாரித்து வெளியிட்டு உள்ளது. 

அந்த ஆய்வறிக்கையானது, “உலக காற்றின் தர அறிக்கை, 2020” என்கிற தலைப்பில், உலகளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான முடிவுகள் அறிக்கையாக தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. 

அந்த ஆய்வறிக்கையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் அண்டு வரை, டெல்லியின் காற்றின் தரம் ஏறக்குறைய 15 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அத்துடன், “முன்னேற்றம் இருந்த போதிலும், மாசுபாட்டில் 10 வது இடத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி, இடம் பெற்றிருக்கிறது. இதனால், உலகின் மாசுபட்ட தலைநகராகவும் டெல்லி திகழ்கிறது. 

அதே போல், ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, “மிகவும் மாசுபட்ட நகரங்களின் தர வரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதும், உலக அளவில் மிகவும் மாசுபட்ட முதல் 30 நகரங்களில் 22 இடங்கள் இந்தியாவில் இருப்பதும்” இந்த ஆய்வறிக்கையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், “இந்தியாவில் டெல்லியைத் தவிர, உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் 21 இந்திய நகரங்கள் எது என்று பார்த்தால்; காசியாபாத், புலந்த்ஷஹர், பிஸ்ராக் ஜலல்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ, மீரட், ஆக்ரா மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகர், ராஜஸ்தானில் பிவாரி, ஃபரிதாபாத், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத், பந்த்வாரி, குருகிராம், யமுனா நகர், ஹரியானாவில் ரோஹ்தக் மற்றும் தருஹேரா, பீகாரில் முசாபர்பூர் ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் வரிசை கட்டி நிற்கின்றன. 

குறிப்பாக, இந்த ஆய்வறிக்கையில், மிக அதிகமான அளவில் மாசுபட்ட நகரமாக, சீனாவில் உள்ள சின்ஜியாங் நகரம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, ஒன்பது இந்திய நகரங்கள் இருக்கின்றன. அதன் படி, காசியாபாத் உலகின் 2 வது மாசுபட்ட நகரமாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து புலந்த்ஷஹர், பிஸ்ராக் ஜலல்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ பிவாரி ஆகிய நகரங்களும்” அதில், இடம் பெற்று உள்ளன.

முக்கியமாக, போக்குவரத்து, தொழில், கட்டுமானம், கழிவுகளை எரித்தல், சமையல் புகை, மின்சார உற்பத்தி, முதலியவை இந்தியாவின் காற்று மாசுபாட்டின் முக்கியக் காரணிகளாக அதில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 

அத்துடன், உலகளாவிய நகரங்களின் தரவரிசை அறிக்கை 106 நாடுகளின் PM2.5 தரவை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன. இவை, தரை அடிப்படையிலான கண்காணிப்பு நிலையங்களால் அளவிடப் படுகிறது என்றும், இவற்றில் பெரும்பாலானவை அரசாங்க நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.