“தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் என மாற்றுவோம்” என்று, உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேசியுள்ளது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. 

“தாஜ்மஹால், காதலின் நினைவு சின்னமாக உலகப் புகழ் பெற்றுத் திகழும் உலக அதிசயங்களில் ஒன்று. அப்படியான தாஜ்மஹால் இந்தியாவில் இருப்பது, நமக்கெல்லாம் பெருமையே” ஆனால், அப்படி உன்னத அன்பின் காதலின் நினைவு சின்னமாக அமைதியாக இருக்கும் இந்த தாஜ்மஹாலைச் சுற்றி எவ்வளவு அரசியல். எவ்வளவ பிரச்சனைகள் எழுப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றன என்பதனை கடந்த காலம் முதல் நாம் ஊடகங்களின் வழியாகப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். தற்போது, இந்த தாஜ்மஹால் பற்றி மீண்டும் சர்ச்சை கிளப்பப்பட்டு இருக்கிறது. 
 
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உலக புகழ்பெற்ற அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் நினைவுச் சின்னம் அமைந்திருக்கிறது. இந்த அன்பின் நினைவுச் சின்னமானது, முகலாய அரசர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஷாஜகானால் கட்டி எழுப்பப்பட்டது. 

ஆக்ராவில் இருக்கும் இந்த அன்பின் சின்னம் தாஜ்மஹாலைக் காண, உலகம் முடிவதில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில் தான், தாஜ்மஹால் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்து உள்ளார் உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்.

அதாவது, உத்தரப் பிரதேசம் மாநிலம் பைரா தொகுதியின் எம்எல்ஏவாக இந்த சுரேந்திர சிங், இருந்து வருகிறார். இப்படியான நிலையில், தாஜ்மஹால் பற்றி கருத்து கூறியுள்ள அவர், “இந்த தாஜ்மஹால் இருந்த இடத்தில் ஏற்கெனவே இந்துக் கடவுளான சிவன் கோயில் இருந்தது என்றும், அதை இடித்து அதன் மீது ஷாஜகான், இந்த தாஜ்மஹாலைக் கட்டினார்” என்றும், கூறியுள்ளார்.

“இதன் காரணமாக, ஆக்ராவின் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் விரைவில் வேறு பெயரைச் சூட்டுவார்” என்றும், அவர் தெரிவித்தார். 

குறிப்பாக, “தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் என மாற்றுவோம்” என்றும், அவர் கூறியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. 

பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்கின் இந்த கருத்து, உத்தரப் பிரதேசம் மாநிலத்திலேயே எதிர் மறையான கருத்துக்களை எழுப்பியிருக்கிறது. அத்துடன், இந்தியா முழுவதும் இந்த செய்தி பரப்பப்பட்டு வரும் நிலையில், பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்கிற்கு எதிராகப் பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதே பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் இதற்கு முன்னரும் கூட பல முறை பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கிறார். 

முன்னதாக, “இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்றுச் சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும், அவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது” என்றும், பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அந்த வகையில், “தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் அல்லது சிவாஜி மஹால், கிருஷ்ணர் மஹால் என்று, மாற்ற வேண்டும் என்று மீண்டும் கூறி உள்ளது, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

அதே போல், தாஜ்மஹாலை அந்த மாநில அரசு சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கியிருந்தது. பின்னர், கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த மாநில அரசு மீண்டும் சேர்த்துக்கொண்டது.

அப்போது கருத்து தெரிவித்திருந்த நடிகர் பிரகாஷ்ராஜ், “தாஜ்மகாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று எனக்கு முன்கூட்டியே சொல்லுங்கள். அதற்கு முன்னர் கடைசியாக ஒரு முறை எனது குழந்தைகளை அழைத்துச் சென்று தாஜ்மஹாலைக் காட்டி விடுகிறேன்” என்று நக்கலாகக் கூறியிருந்தார். இது, இந்தியா முழுவதும் வைரலான நிலையில், மிகப் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.