ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி புராரி பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி புராரி பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டில் இருந்து போலீசார் 11 பேரின் சடலங்களைக் கண்டெடுத்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில், உயிரிழந்த அனைவரும் கூட்டாகத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தற்போது அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது நாட்டையே உலுக்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரே வீட்டில் இருந்து 11 பேரின் சடலங்கள் தற்போது கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்த இந்து குடும்பம் ஒன்று, ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் தங்கி வசித்து வந்தனர். பில் சமூகத்தைச் சேர்ந்த அந்த குடும்பத்தில், 2 ஆண்கள், 4 பெண்கள், 5 குழந்தைகள் என்று மொத்தம் 11 பேர் இருந்தனர். 

அந்த குடும்பத்தில், அதே பகுதியில் குத்தகை விவசாயம் செய்து வந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஜோத்பூர் வந்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்ட அந்த குடும்பத்தினர், நேற்று திடீரென்று அவர்கள் ஒட்டு மொத்த பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து, அந்த வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 11 பேரின் சடலங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அங்குக் கிடந்த தடயங்களைச் சேகரித்தனர். 

மேலும், உயிரிழந்த 11 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அதில், ஒருவர் மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உயிர் உயிர் பிழைத்தால் மட்டுமே, அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. 

அத்துடன், அந்த வீட்டில் இருந்து மருந்து வாசனை அடிப்பதாகவும், இதனால், உயிரிழந்த அனைவரும் கூட்டாகத் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது கொலையா? அல்லது தற்கொலையா?? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா??? என்கிற 
ரீதியில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஒரே குடும்பத்தில் உள்ள 11 பேரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.