கேரள மாநிலம் கோழிக்கோடில் துபாயில் இருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவம், பல்வேறு அதிர்வலைகளை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விமான விபத்து விசாரணை பணியகத்தை சேர்ந்த அதிகாரிகள் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி என்றழைக்கப்படும் டிஜிட்டல் பிளைட் ரெக்கார்டரை பத்திரமாக மீட்டுள்ளதாகவும் அது டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

"விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பயணிகளும், ஆறு விமானப் பணியாளர்களும் இருந்தனர். அவர்களில் 149 பேர் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 22 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று மலப்புரம் மாவட்டத்தின் ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள கொண்டொட்டி பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றியுள்ளனர். இந்த கிராமம் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதால், யாருக்கேனும் கொரோனா அபாயம் இருந்திருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் தீவிர மருத்துவ கண்காணிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி  விஜயன், ஏர் இந்தியா விமான சேவை நிறுவன அதிகாரிகள் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

அப்போது ஏர் இந்தியா சார்பில், கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 வயதுக்கு மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.

மேலும் ஹர்தீப் சிங், ``வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபையிலிருந்து 190 பயணிகளுடன் கோழிக்கோடு வந்த இந்த விமானத்தை விமானி தரையிறக்க முயற்சிக்கும்போது அங்கிருந்த மழைக்கால சூழ்நிலையின் காரணமாக சறுக்கிவிட்டது. விமானத்தில் தீப்பிடித்திருந்தால் மீட்புப்பணிகள் இன்னும் கடினமானதாக இருந்திருக்கும். நான் சம்பவம் நடந்த கோழிக்கோடு விமான நிலையத்திற்கு செல்கிறேன்" என்று கூறியிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தரையிறங்குவதில் சிக்கல் இருந்ததால், விமானத்தை, விபத்திற்கு முன் மூன்று முறை தரையிறங்க முயற்சித்துள்ளார் விமானத்தின் ஓட்டுநர். ஆனால் மோசமான வானிலை காரணமாக அப்படி செய்ய முடியாமல் போயுள்ளது. என்ன செய்வதென தெரியாமல், இறுதி முயற்சியாக தரையிறக்கியுள்ளார். அப்போதும், விமானம் தீப்பிடித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். 

கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் முதலில் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்க முயன்றுள்ளது.ஆனால், அதில் தரையிறங்காமல் இரண்டாவது முறையாக ஓடுதளத்தின் 28-ல் தரையிறங்க முயற்சித்துள்ளது. அதன் பின்னர் மூன்றாவது முறை மீண்டும் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்கும் போது தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு நிபுணர் குழு தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளது. இப்படியாக, தீவிபத்தை தவிர்த்துவிட்டு, சேதாரங்கள்தான் ஆனது என்றபோதிலும், உயிரிழப்பும் நேர்ந்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இது தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து மொத்தம் மூன்று சிறப்பு நிவாரண விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளா விமான விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற, கோழிக்கோடு பகுதியின் பொதுமக்கள் நள்ளிரவு நேரத்தில் கூடி ரத்த வங்கியில் வரிசையில் நின்று ரத்த தானம் அளித்தது, பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. மனிதம் மட்டுமே, இப்போதுவரை கேரளாவை உயிர்ப்புற செய்கிறது!